விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கும் பணி தீவிரம்: சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக திறக்க வாய்ப்பு

விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கும் பணி தீவிரம்: சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக திறக்க வாய்ப்பு
Updated on
1 min read

விழுப்புரத்தில் புதிய பல்கலைக் கழகம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி விழுப்புரத்தில் நடந்த அரசு சட்டக்கல்லூரி மற்றும்மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, "வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதியபல்கலைக்கழகம் உருவாக்கப் படும்" என முதல்வர் பழனிசாமி கடந்த செப்டம்பர் 16-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

ஜெயலலிதா பெயரில் நாகை யில் மீன்வளப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளதால் விழுப்புரம் பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் ஜெயலலிதாவின் பெயர் சூட்ட முடியுமா என்பது பற்றி முதல்வர் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையே விழுப்புரத்தில் அமைய உள்ள புதிய பல்கலைக்கழகத்திற்கு ஏ.கோவிந்தசாமி பெயரை சூட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார். திண்டிவனத்தில் ஏ. கோவிந்தசாமி பெயரில் அரசு கலைக்கல்லூரி இருப்பதால் இப்பெயரை சூட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பலகலைக்கழகம் அமைக்க தேவையான இடத்தை தேர்வு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

இதுகுறித்து வருவாய்த்துறை வட்டாரங்களில் கேட்டபோது, "பல்கலைக்கழகம் அமைய உள்ள இடம் விழுப்புரம் நகராட்சிக்குள் இருக்கும் வகையில் பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில் திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஆவின் வளாகத்தில் தேவையான இடம் உள்ளது. அதில் காலியாக உள்ள பகுதியை பயன்படுத்தலாமா என பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள பால் பண்ணையில், பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதால் அதில் இருந்து வெளியாகும் வாசம் அதிக அளவில் உள்ளது.

இதற்காக பால் பண்ணையையே வளவனூர் அருகே செங்காடு செல்லும் பகுதிக்கு மாற்றம் செய்யவும், அப்படி மாற்றம் செய்வதால் ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்படும் செலவுத்தொகை ரூ.4 கோடியை எப்படி திரட்டுவது என்றும் யோசிக்கப்பட்டு வருகிறது. சட்டசபைத் தேர்தல் அறிவிப்புக்கு முன் நிச்சயம் பல்கலைக்கழக திறப்புவிழா நடைபெறும். அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in