பருப்பு விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி நவ.3-ல் மக்கள் நலக் கூட்டு இயக்கம் ஆர்ப்பாட்டம்: வைகோ

பருப்பு விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி நவ.3-ல் மக்கள் நலக் கூட்டு இயக்கம் ஆர்ப்பாட்டம்: வைகோ
Updated on
2 min read

பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலையைக் குறைக்க வலியுறுத்தி வரும் நவம்பர் 3ம் தேதி மக்கள் நலக் கூட்டு இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கடந்த ஆண்டு 80 ரூபாய்க்கு விற்ற துவரம் பருப்பு, மத்திய-மாநில அரசுகளின் அலட்சியத்தால் தற்போது ரூ.220 அளவுக்கு உயர்ந்து இருக்கின்றது. தீபாவளி பண்டிகை நெருங்குகையில் பருப்புகள் உள்ளிட்ட அன்றாடத் தேவை உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்தால், அனைத்துத் தரப்பு மக்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றார்கள்.

கடந்த ஆண்டு பா.ஜ.க. அரசு பதவிக்கு வந்தபிறகுதான், இணையதள வணிகத்தில் பருப்பு வகைகளைச் சேர்த்தது. அதுதான் இந்தத் தாறுமாறான விலை உயர்வுக்குக் காரணம் ஆகும். இணைய வணிகச் சூதாடிகளைக் கட்டுப்படுத்தத் தவறியதால், அவர்கள் பருப்புகளைப் பதுக்கி, விலை உயர்வை ஏற்படுத்திக் கொள்ளை லாபம் அடிக்க வழிவகுத்துக் கொடுத்து விட்டார்கள். அதனால்தான் இப்போது, நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகள் மூலம் 82 ஆயிரம் டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றது.

மேலும் பருப்பு விளைச்சல் குறைவு என்று மத்திய அரசு காரணம் கூறுவதை ஏற்க முடியாது. நாட்டில் பருப்பு சாகுபடி பரப்பளவு குறைந்து வருவதைப் பற்றி அரசு கவனத்தில் கொள்ளவில்லை. விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்காமல், உள்நாட்டில் விளைச்சலைப் பெருக்காததால், இன்றைக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் அயல்நாட்டுச் செலாவணியைக் கூடுதலாகச் செலவிட்டு 7 ஆயிரம் டன் பருப்பை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இறக்குமதியை நம்பி இருப்பது நிரந்தரமான தீர்வைத் தராது.

இணையதள வணிகமும், முன்பேர வணிகமும், நாட்டில் செயற்கையான முறையில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலை ஏற்றத்திற்கு வழி வகுத்து வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரÞ கூட்டணி அரசு கடைபிடித்த தவறான பொருளாதாரக் கொள்கைகளையே மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. விலைவாசி கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதற்கு இதுதான் முதன்மைக் காரணம் ஆகும்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற பெரு நகரங்களில் மட்டும் கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக பல்பொருள் அங்காடிகள் மூலம் துவரம் பருப்பு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு கூறி இருக்கின்றது.

இதனால் பயன் பெறுவோர் எண்ணிக்கை சில இலட்சம் பேர்களே. யானைப் பசிக்குச் சோளப்பொறி என்பது போல, கோடிக்கணக்கான தமிழக மக்களுக்கு எந்த வகையிலும் இந்தத் திட்டம் பயன் தரப்போவது இல்லை. இது ஒரு கண்துடைப்பே ஆகும்.

உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்தும்; வெளிச் சந்தையில் பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலையைக் குறைக்க வலியுறுத்தியும்; மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் சார்பில், நவம்பர் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பகல் 11 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்களும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்று, அறப்போர் ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்"

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in