Published : 09 Dec 2020 09:27 PM
Last Updated : 09 Dec 2020 09:27 PM

கபட நாடகம் போடாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே நிவாரண உதவி வழங்குங்கள்: ஸ்டாலின் வலியுறுத்தல்

விவசாயிகளின் கண்ணீர் துடைக்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி கபட நாடகம் போட்டு, காலம் தாழ்த்தி ஏமாற்ற முயற்சிக்காமல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல் கட்டமாக, இடைக்கால நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக விவசாயப் பெருமக்களும், மீனவ சமுதாயத்தினரும், மத்திய பாஜக - மாநில அதிமுக அரசுகளின் இரட்டைத் தாக்குதல்களுக்கு ஆளாகியிருப்பது போதாதென்று, இப்போது நிவர் - புரெவி எனும் இரட்டைப் புயல்களின் வீச்சுக்கு ஆளாகி, நொந்து நொறுங்கிப் போயிருக்கிறார்கள்.

இத்தகைய சோகம் கவிந்திருக்கும் சூழலில், “நிவர்” புயல் நிவாரணத்திற்காக மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பே 74 கோடி ரூபாய் ஒதுக்கி விட்டு, இன்று வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும்- மீனவர்களுக்கும் - ஏழை எளியோர்க்கும் இடைக்கால நிவாரணம் கூட, முதல் தவணையாக, எதுவும் அறிவிக்காமல் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்போரின் சார்பில், கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி டெல்டா பகுதிகளில், பல இலட்சக் கணக்கான ஏக்கர் கழனிகளில், மூழ்கி அழுகிக் கிடக்கும் பயிர்களை நேரில் பார்த்த பிறகும் கூட, அவருக்கு விவசாயிகளின் வேதனையும் - மனக்குமுறலும் புரியவில்லை என்பது நாட்டுக்கு நேர்ந்திருக்கும் கெடுவாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். “உழவர்களின் துயரத்தை நேரில் பார்க்கப் போகிறேன்” என்று கூறிவிட்டு திருவாரூர் சென்றவர், தனது “ஊழல் நாயகர்” என்ற உண்மைத் தோற்றத்தை மறைக்கப் படாதபாடு பட்டுக் கொண்டிருப்பது, அவரது பத்திரிகைப் பேட்டிகளில் பரிதாப வண்ணத்தில் தெரிகிறதே தவிர- ஒதுக்கிய நிதியை ஒரு வாரமாக என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்றே பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தெரியவில்லை.

வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவது போல் - வேளாண் விளைபொருட்களை இழந்து நிற்கும் விவசாயிகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் வகையில் முதல்வர் பொறுப்பற்ற வகையில், தனது கடமையை மறந்து, கண்ணியம் துறந்து பேசி வருகிறார். அதன் மூலம் தனது பக்குவமின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார். “விளை பொருட்களுக்கு உரிய விலை சட்டபூர்வமாகக் கிடைக்கப் போவதில்லை என்றுதான், அதிமுக ஆதரித்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து” நாடே போராடிக் கொண்டிருக்கிறது.

தமிழக விவசாயிகளும் நேற்றைய தினம் பெருந்திரள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் காவிரி டெல்டாவில் நின்று கொண்டு- “விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு சொல்லுங்கள்” என்றும், “விவசாயி என்ற முறையில் வேளாண் சட்டங்களை ஆதரித்தேன்” என்றும் ஒரு சாதாரண விவசாயியின் சங்கடங்களை உணராமல் முதல்வர் பேசுவது- விவசாயிகளை அப்பட்டமாகக் கொச்சைப்படுத்தும் அருவருக்கத்தக்க போக்காகும்.

தன்னை “விவசாயி” என்று சொல்லிக் கொள்பவரின் அவமானகரமான அணுகுமுறையாகும். எப்படி ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றத்தால் உட்படுத்தப்பட்ட ஒரே முதல்வராக பழனிசாமி இருக்கிறாரோ, அதே போல் “குறைந்தபட்ச ஆதார விலையே உத்தரவாதம் அளிக்கப்படாத” வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் ஒரே விவசாயி முதல்வர் பழனிச்சாமியாக மட்டும்தான் இருக்க முடியும் என்பது தமிழகத்திற்கே தலை குனிவாகும்.

தனது ஊழலை மறைக்க - தன் அமைச்சர்களின் ஊழலுக்குத் திரை போட, இன்று உத்தமர் வேடம் போடும் முதல்வர் - இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில், பயிரையும் உடைமைகளையும் பறி கொடுத்து, விவசாயிகள் தங்களது உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு படும் துன்ப துயரங்களுக்கு இடையே நின்று கொண்டு, கபட நாடகம் போடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

'நிவர்' புயலால் நெல், வாழை உள்ளிட்ட விளை பொருட்களை இழந்து தவிக்கும் விவசாயிகள், வீடுகளை இழந்து வேதனையில் உழலுவோர், வேறு வழியின்றி நிவாரண முகாம்களில் தங்கியிருப்போர் எல்லாம் தங்களின் எதிர்காலம் பற்றிய மிகப்பெரிய நிச்சயமின்மையிலும், அச்சத்திலும் உறைந்து போயிருக்கிறார்கள். அனைத்து பாதிப்புகள் குறித்தும் உரிய கணக்கெடுப்பை ஓரவஞ்சனையின்றி குழப்பங்கள், குளறுபடிகளுக்கு இடமளித்து விடாமல், வெளிப்படையாக எடுத்து இறுதிக் கட்டமாக முழு நிவாரண உதவிகளையும் வழங்கலாம்.

ஆனால் அதற்கு முன்பு, “கணக்கு எடுத்து நிவாரணம் கொடுப்போம்”, “மத்திய அரசிடம் நிதி பெறுவோம்” என்றெல்லாம் சாக்குப் போக்கு சொல்லி வீராப்பு காட்டாமல் - ஆழ்ந்த சோகத்திலும், துயரத்திலும் மூழ்கியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாயும், விளை பொருட்களை இழந்து விழிநீர் பெருக்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் முதல் தவணை நிவாரணமாக உடனடியாக வழங்கிட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியை மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

வியர்வை சிந்தி உழைத்த விவசாயிகளை, வீணே கண் கலங்க வைக்காமல்- முதல்வர், “இடைக்கால நிவாரணம்” கொடுத்து உதவிட, மறு சிந்தனைக்கு இடம் கொடுத்துக் காலம் தாழ்த்தாமல், உடனடியாக முன்வர வேண்டும் என்றும், ஒதுக்கிய பணத்தைப் பயன்படுத்தாமல், “விவசாயிகளின் கண்ணீர் துடைக்கிறேன்” என்று கபட நாடகம் போட்டு, வழக்கம் போல் இங்கு யாரையும் ஏமாற்ற முயற்சி செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x