

என்எல்சி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நீரினால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு என்எல்சி நிர்வாகம் நிவாரணம் வழங்க வேண்டும், அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று கடலூர் கிழக்கு மாவட்டத் திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்டத் திமுக செயலாளருமான எம்ஆர்கே.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''கடலூர் மாவட்டம் மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட, குறிஞ்சிப்பாடி ஒன்றியம் மற்றும் வடலூர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிப் பகுதிகளில் கனமழையின் காரணமாகவும், என்எல்சி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரினாலும் வெள்ளப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்எல்சி நிர்வாகம் வெள்ள நிவாரணத்தையும், அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும்.
கடலூர் மாவட்ட இயற்கை வளத்தையும், மாவட்ட மக்களின் வீடுகள், நிலங்கள், உடைமைகளையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து உருவாக்கப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இன்றைய நாளில் பல்லாயிரக் கோடிக்கணக்கான மதிப்புமிக்க சொத்துகளை உடையதாகவும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி லாபம் ஈட்டக்கூடிய மாபெரும் நிறுவனமாகவும் பெரு வளர்ச்சி பெற்றிருக்கும் இவ்வேளையில் இந்நிறுவத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக விளங்கக்கூடிய கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது கைகட்டி, அந்நிறுவனம் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
குறிஞ்சிப்பாடி ஒன்றியப் பகுதிகள், வடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சிப் பகுதிகளில் கனமழையின் காரணமாகவும், குறிப்பாக இப்பகுதிகளின் வழியாக என்எல்சி சுரங்கத்தில் இருந்து அடிக்கடி வெளியேற்றப்படும் நீரினால், இந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், விவசாய நிலங்கள், குடியிருப்பு வீடுகள், கால்நடைகள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
இப்பகுதிகளிலுள்ள மக்களுக்கு என்எல்சி நிர்வாகம் நிரந்தரமாக கான்க்ரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். மேலும் என்எல்சி நிறுவனத்தினால் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சிஎஸ்ஆர் நிதி முழுவதுமாக இம்மாவட்டத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். வேறு மாநிலத்திற்கு சிஎஸ்ஆர் நிதியைப் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கடலூர் மக்களுக்கு என்எல்சி நிர்வாகம் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தராவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்த நேரிடும்''.
இவ்வாறு எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.