Last Updated : 09 Dec, 2020 07:43 PM

 

Published : 09 Dec 2020 07:43 PM
Last Updated : 09 Dec 2020 07:43 PM

ஏற்காடு ஏரியில் படகு சவாரி: 8 மாதங்களுக்குப் பின்னர் தொடக்கம்

8 மாதங்களுக்குப் பின்னர் ஏற்காடு ஏரியில் சுற்றுலாப் பயணிகளுக்கான படகு சவாரி மீண்டும் தொடங்கி இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஏற்காடு சுற்றுலாத் தலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான படகு சவாரி, கடந்த மார்ச் மாத இறுதியில் நிறுத்தப்பட்டது. பின்னர், ஊரடங்கில் ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன் காரணமாக, ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம் எனத் தோட்டக்கலைத் துறையின் பூங்காக்கள் அனைத்தும் கடந்த மாதமே திறக்கப்பட்டுவிட்டன.

ஆனால், ஏற்காடு ஏரியில் மட்டும் படகு சவாரிக்கான அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. ஏற்காட்டின் முக்கியச் சுற்றுலா அம்சமான படகு சவாரி தொடங்கப்படாததால், இங்கு வந்திருந்த பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், டிசம்பர் மாதத்துக்கான ஊரடங்கு தளர்வுகளில், அனைத்துச் சுற்றுலாத் தலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும், கடந்த 7-ம் தேதி வரை, ஏற்காடு ஏரியில் படகு சவாரி தொடங்கப்படவில்லை.

ஒருவழியாக 7-ம் தேதி மாலை, சுற்றுலாத்துறை சார்பில் ஏற்காடு ஏரியில் படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால், ஏற்காட்டில் உள்ள சுற்றுலாப் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேலை நாட்கள் என்பதால், ஏற்காட்டில் சேலம் மாவட்ட மக்களின் வருகை குறைவாக உள்ளது. எனினும், வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வந்திருப்பதால், ஏற்காடு ஏரியில் படகு சவாரி களைகட்டியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்காக 4 மோட்டார் படகுகள் உள்பட 55 படகுகளை சுற்றுலாத் துறை இயக்கி வருகிறது. வடகிழக்குப் பருவமழை காரணமாக, ஏற்காட்டில் பெய்யும் சாரல் மழை, கடும் குளிர் ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்குக் கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x