

கரோனா தீவிரமாகப் பரவிய காலத்தில் மத்திய அரசு அறிவித்த ரேஷன் கார்டுக்கு மாதம் ஒரு கிலோ சுண்டல் தற்போதுதான் தமிழகத்தில் மொத்தமாக 5 கிலோவாக சேர்த்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
ஆனால், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த 5 கிலோ சுண்டல் வழங்கப்படுவதால் மற்றவர்கள் குழப்பம் அடைந்து ரேஷன் கடைக்காரர்களுடன் தகராறு செய்யம் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
கரோனா தீவிரமாக பரவிய காலத்தில் அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில் இந்தநோயை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி முக்கியம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது.
அதனால், மத்திய அரசு வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதம் ஒரு கிலோ சுண்டல் வழங்குவதாக அறிவித்து இருந்தது. இந்த சுண்டலை தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் உடனடியாக விநியோகம் செய்யவில்லை.
மற்ற மாநிலங்களில் ஒரளவு விநியோகம் செய்யப்பட்டுவிட்டது.
தற்போது தமிழகத்தில் கரோனா கட்டுக்குள் வந்த நிலையில் தற்போதுதான் மத்திய அரசு அறிவித்த இந்த சுண்டல் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது. அதுவும் மொத்தமாக 5 மாதத்திற்கும் சேர்த்து 5 கிலோ சுண்டல் வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட வறுமை கோட்டிற்கிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதால் மற்ற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், ரேஷன் கடைக்காரர்களுடன் வாக்குவாதம் செய்யும் சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அரங்கேறி வருகிறது.
மதுரையில் நேற்று முன் தினம் பெரும்பாலான கடைகளில் இந்த சுண்டல் விநியோகம் தொடங்கிய நிலையில் மற்ற குடும்ப அட்டைதாரர்களும் சுண்டல் கேட்டு வாதம் செய்ததால் ரேஷன் கடை ஊழியர்கள் அவர்களை சமாதானம் செய்ய முடியாமல் திண்டாடினர்.
இதுகுறித்து ரேஷன் கடைக்கடை ஊழியர்கள் கூறியதாவது:
அரிசி கார்டுகளுக்கு மட்டும் பொங்கல் ரொக்கப்பரிசு, கரோனா நிவாரணம் என்று தமிழக அரசு வழங்குவது போல் மத்திய அரசு அறிவித்த இந்த சுண்டல் PHH என்ற வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள முன்னுரிமையுள்ள ரேஷன் கார்களுக்கும், AAY என்ற 35 கிலோ அரிசி கார்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
முன்னுரிமை இல்லாத NPHH கார்டுகளுக்கு வழங்கப்படுவதில்லை. இந்த AAY, PHH, NPHH குறியீடு குடும்ப தலைவர் புகைப்படத்திற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை அறியாமல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் சுண்டல் கேட்டு பிரச்சனை செய்கின்றனர். அவர்களுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை.
நாங்கள் எவ்வளவு சொல்லியும் சிலர் கேட்காமல், ‘‘எங்களுக்கு ஏன் தரவில்லை, தராவிட்டால் தராததிற்கு காரணத்தை எழுதிக் கொடுங்கள், ’’ என்று பிடிவாதம் செய்கின்றனர்.
அரசு ஒன்று மாதந்தோறும் இந்த சுண்டலை மத்திய அரசு அறிவித்தபோதே வழங்கியிருக்க வேண்டும். தற்போது மொத்தமாக 5 கிலோ வழங்குவதால் அது மற்ற மக்கள் மத்தியில் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதை அவர்களும் இது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்குதான் வழங்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதில்லை.
இவ்வாறு தெரிவித்தனர்.
மதுரை மாவட்ட வழங்கல் அலுவலரிடம் கேட்டபோது, ‘‘AAY, PHH கார்டுகளுக்கு மட்டுமே மத்திய அரசு கரோனா காலத்திற்காக அறிவித்த சுண்டல், பருப்பு வழங்கப்படுகிறது. மற்ற கார்டுகளுக்கு கிடையாது, ’’ என்றார்.