

மதுரவாயல் மழைநீர் வடிகாலில் விழுந்து தாய், மகள் உயிரிழந்த விவகாரத்தில் இழப்பீடு வழங்குவது குறித்து தேசிய நெடுஞ்சாலை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மோசமான நெடுஞ்சாலைப் பராமரிப்பைச் சரிசெய்யும் வரை 50% மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டது.
சென்னையை அடுத்த மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்ற கடிதத்தின் அடிப்படையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது சாலைப் பணிகள் குறித்து மத்திய அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், காரைப்பேட்டை முதல் வாலாஜா வரை 36 கிலோ மீட்டருக்கு சாலை அமைப்பதற்காக 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை 31 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், பணியில் ஏன் காலதாமதம் என்று கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர், ''மாநில அரசின் பல்வேறு துறைகளிடம் ஒப்புதல் பெற வேண்டியுள்ளதால் இந்தத் தாமதம் ஏற்பட்டது. அனைத்து ஒப்புதல்களையும் எளிதில் வழங்கும் வகையில் ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கோரிக்கை வைத்தார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு ஒற்றைச் சாளர முறையை உருவாக்குவதற்கான தக்க தருணம் இது என்று ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக பதிலளிக்க தமிழக தலைமைச் செயலாளரை எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டனர்.
சாலைகளை அமைக்கும்போது, ‘இந்திய சாலை தர காங்கிரஸ்’ அமைப்பின் விதிகளைப் பின்பற்றி, சாலைகளை அமைக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மோசமான சாலைகள் காரணமாக விபத்து ஏதும் நேர்ந்தால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குவதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தைப் பொறுப்பாக்க வேண்டிவரும் என எச்சரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
''தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போடும் சாலைகள் அனைத்தும் இந்திய சாலை காங்கிரஸ் அமைப்பு கூறிய விதிகளின் தரத்தில் இல்லை. பழுதடைந்த நிலையில் உள்ள மதுரவாயல்- வாலாஜா நெடுஞ்சாலை ஏன் பல நாட்களாகச் சரி செய்யவில்லை?'' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில், 10 நாட்களில் பழுது பார்க்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் அமர்வு, 2 வாரத்துக்கு மதுரவாயல்- வாலாஜா நெடுஞ்சாலைக்கு இடையே உள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீத சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 520 விபத்துகள் நடைபெறுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், சாலை விபத்து வழக்குகளில் இனி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையையும் சேர்க்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தனர்.
நொளம்பூர் மழைநீர் கால்வாயில் விழுந்து இறந்த தாய், மகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பதிலளிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை டிசம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.