

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணைக் குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய மனு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழுவுக்கு தடை விதிக்கக்கோரி குமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த மணி தனிகை குமார், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் தன்னையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கக்கோரி துணை வேந்தர் சூரப்பாவும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பாக உயர் நீதிமன்றம மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்ய முடியாது. இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனத் தெரிவிக்கப்பட்டது.
துணை வேந்தர் சூரப்பா சார்பில் ஆஜரான வழக்கில், அண்ணா பல்கலைக்கழகம் சென்னையை தலைமையிடமாக கொண்டிருந்தாலும், அதன் உறுப்பு கல்லூரிகள் பெரும்பாலானவை தென் தமிழகத்தில் உள்ளது.
எனவே இந்த வழக்கை உயர் நீதிமன்ற கிளை விசாரிக்கலாம். சூரப்பா மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க குழு அமைத்ததில் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுனருக்கு விருப்பமில்லை என்றார்.
பின்னர், அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் சூரப்பாவை எதிர்மனுதாரராக இல்லாமல், இரண்டாம் மனுதாரராக நீதிமன்றம் சேர்க்கிறது. இந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அதிகாரம் இல்லாததால், வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வுக்கு மாற்றப்படுகிறது என உத்தரவிட்டனர்.