நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசனத்துக்காக மணிமுத்தாறு, கொடுமுடியாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசனத்துக்காக மணிமுத்தாறு, கொடுமுடியாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு
Updated on
1 min read

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடப்பு பிசான பருவத்துக்காக மணிமுத்தாறு, கொடுமுடியாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி இன்று திறந்து வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:

மணிமுத்தாறு பிரதான கால்வாய் நீரொழுங்கு விதிமுறைகளின்படி 2019-2020-ம் ஆண்டு 1 மற்றும் 2-வது ரீச்சுகளின் கீழ்உள்ள குளங்களுக்கு முன்னுரிமை அளித்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்பட்டது.

இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து நடப்பு பிசான பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வரப்பெற்றதை அடுத்து தற்போது தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது.

பிரதான கால்வாயில் 3 மற்றும் 4-வது ரீச்சுகளின் கீழுள்ள 12,018 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் வரும் மார்ச் 31-ம் தேதி வரை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.

இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் வட்டங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், திருவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூர் வட்டங்களும் பயன்பெறும்.

மணிமுத்தாறு பிரதான கால்வாயில் 1 மற்றும் 2-வது ரீச்சுகளுக்கு தண்ணீர் கொடுப்பதற்கு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோல் கொடுமுடியாறு அணையிலிருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் நாங்குநேரி, ராதாபுரம் வட்டங்களில் உள்ள வள்ளியூரான் கால், படலையார் கால் மற்றும் ஆத்துக்கால் ஆகிய கால்வாய்கள் மூலம் 240.25 ஏக்கர் நேரடி பாசனமும், இதன் குளங்கள் மூலம் 2517.82 ஏக்கர் மறைமுக பாசனமும், வடமலையார்கால் மூலம் 3231.97 ஏக்கருமாக மொத்தம் 5780.91 ஏக்கர் நிலம் நடப்பாண்டு பிசான சாகுபடியில் பயன்பெறும். இந்த அணையிலிருந்து வரும் மார்ச் 31-ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும்.

எதிர்வரும் நாட்களில் பருவமழை பொய்த்து எதிர்பார்க்கும் நீர் வரத்து கிடைக்கப்பெறவில்லை என்றால் இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். முருகையாபாண்டியன், ஐ.எஸ். இன்பதுரை, வே. நாராயணன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கணேசராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in