

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்ற மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.கோபிநாதன் கூறியதாவது:
தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் உள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். வேலை நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணயம் செய்ய வேண்டும். பெண் மருத்துவ பிரதிநிதிகளுக்கு 6 மாத பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென்பதை வலியுறுத்தி மாநிலம் தழுவிய இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலப் பொதுச் செயலாளர் சி.பிரபாகர் தேவதாஸ், துணை பொதுச் செயலாளர் சத்தியநாராயணன், பொரு ளாளர் ஆர்.வெங்கடேசன், மாநிலத் துணைத் தலைவர் பி.எம்.ரவி, பொது காப்பீடு ஊழியர் சங்க தென்மண்டல பொதுச் செயலாளர் ஜி.ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.