

முதல்வர் நாராயணசாமி போட்டியிட தனது தொகுதியை விட்டுத்தந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் அக்கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்த இவர், பாஜக மேலிடப் பொறுப்பாளருடன் ரகசியமாக சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் பொறுப்பேற்றவுடன், எம்எல்ஏவாக போட்டியிடாத நாராயணசாமி முதல்வராகத் தேர்வானார். அவர் போட்டியிட நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான ஜான்குமார் தனது தொகுதியை விட்டுத் தந்தார். அதையடுத்து, நெல்லித்தோப்பில் போட்டியிட்டு நாராயணசாமி வென்றார்.
அதைத் தொடர்ந்து, காமராஜ் நகர் தொகுதி எம்எல்ஏ வைத்திலிங்கம் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு வென்றதால் அத்தொகுதியில் ஜான்குமார் போட்டியிட்டு காங்கிரஸ் எம்எல்ஏவானார்.
ஜான்குமார் முதல்வருக்கு மிக நெருக்கமாக இருந்து வந்தார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு தனக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை என்று அதிருப்தியில் ஜான்குமார் எம்எல்ஏ இருந்தார்.
இந்நிலையில், அவர் வரும் தேர்தலில் தானும், தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் போட்டியிட வசதியாக நெல்லித்தோப்பு, காமராஜ் நகர், உழவர்கரை தொகுதிகளை ஒதுக்கக் கோரியிருந்ததாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேச்சு எழுந்தது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார்.
இச்சூழலில், புதுச்சேரி பாஜக மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கர்நாடகத்தைச் சேர்ந்த நிர்மல்குமார் சுரானா புதுச்சேரி வந்திருந்தார். அவரை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, மேற்கு மாநில அதிமுக செயலாளர் ஓம்சக்தி சேகர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்தப் பேசினர்.
இந்நிலையில், நிர்மல்குமார் சுரானாவுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஜான்குமார் பொன்னாடை அணிவித்து மலர்க்கொத்து வழங்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் நேற்று (டிச.8) இரவு வெளியானது.
இதுகுறித்து, ஜான்குமார் எம்எல்ஏவிடம் கேட்டபோது, "மரியாதை நிமித்தமாகச் சந்தித்தபோது எடுத்த படத்தை யாரோ சமூகவிரோதிகள் அனுப்பியுள்ளனர்" என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் நிர்வாகிகள் தரப்பில், "ஜான்குமார் எம்எல்ஏ தனிப்பட்ட முறையில் பாஜக மேலிடப் பார்வையாளரைச் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? அவரைக் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும்" என்ற வலியுறுத்தல் தொடங்கியுள்ளது.