

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா மையங்களும் திறந்த பின்பும் 9 மாதங்களாக திற்பரப்பு அருவியில் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் அருவி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா மையமாக திற்பரப்பு அருவி விளங்கி வருகிறது.
குமரி குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் குழந்தைகளுக்கான நீச்சல் குளமும், இயற்கை சூழ்ந்த பூங்கா, மற்றும் பக்கத்திலே படகு சவாரி வசதிகள் நிறைந்த நீரோடை பகுதி என ஒரு நாள் பொழுதை போக்கும் வசதிகள் இங்கு நிறைந்துள்ளன. கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் திற்பரப்பு அருவியில் ஆனந்த குளியலிட்டு சுற்றுப்புறங்களில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை பார்த்து விட்டுச் செல்வர்.
ஆனால் கரோனா ஊரடங்கு தொடங்கிய மார்ச் மாதத்தில் இருந்து திற்பரப்பு அருவியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கடந்த மாதம் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 25ம் தேதி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கான படகு போக்குவரத்தும் தொடங்கியது.
இதற்கு முன்னதாகவே பத்மநாபபுரம் அரண்மனை உட்பட குமரி மாவட்டத்தில் உள்ள பிற சுற்றுலா மையங்களையும் திறந்து சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். கரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்தும் தற்போது சுற்றுலா பயணிகள் வருகை கன்னியாகுமரியில் ஓரளவு உள்ளது.
கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் தொடர்ந்து நீடித்து வரும் தடையை அறியாமல் அங்கு செல்கின்றனர். ஆனால் அருவி பகுதியில் அனுமதிக்கப்படாத நிலையில் தூரத்தில் இருந்தே அருவியை பார்த்தவாறு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
9 மாதங்களாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்காததால் அருவி பகுதி களையிழந்து காணப்படுகிறது. இந்த மாத துவக்கத்தில் அருவி பகுதியை திறந்து சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வாகனங்கள், கடைகள், நுழைவு சீட்டு ஏலம் போன்றவற்றில் போதிய வருவாய் கிடைக்க வாய்ப்பில்லை என காரணம் காட்டி திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் தாமதப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதே நேரம் திற்பரப்பு அருவியை நம்பியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, மற்றும் நடுத்தர வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் குமரி மாவட்ட நிர்வாகத்திடம் தொடர் கோரிக்கை வைத்து வரும் நிலையில் இந்த மாதத்திற்குள் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து திற்பரப்பு அருவி பகுதியில் உள்ள வியாபாரி மாகின் கூறுகையில்; சுற்றுலா மையமான திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலம் நடைபெறும் வர்த்தகத்தை நம்பியே ஏராளமான சிறுமுதலீட்டு வியாபாரிகள் உள்ளோம். கரோனா ஊரடங்கின்போது இழப்பை பற்றி கவலைப்படாமல் விதிமுறைகளுக்கு உட்பட்டு வியாபாரிகளே முழு ஒத்துழைப்பு வழங்கினோம்.
ஆனால் தற்போது திற்பரப்பு அருவி பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கான தடையை நீக்காமல் இழுத்தடித்து வருவதால், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. எனவே விரைவில் திற்பரப்பு அருவி
பகுதிக்கான தடை நீங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.