ஊழல் பற்றி பேச திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஊழல் பற்றி பேச திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ
Updated on
2 min read

ஊழல் பற்றி பேச திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை என, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று தெரிவித்தார்.

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

ஊழலின் மொத்த உருவமே திமுக தான். விஞ்ஞான ரீதியில் எப்படி ஊழல் செய்ய முடியும் என நிருபித்த கட்சி திமுக. சர்க்காரிய கமிஷன் விசாரணையின் போது விசாரணை நடத்திய அதிகாரியே ஆச்சிரியப்படும் அளவுக்கு விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ய முடியும் என உலகுக்கே எடுத்துக் காட்டியது திமுக தான்.

இந்திய சரித்திரத்தில் ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது திமுக ஆட்சி தான்.

அதுபோல கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்ய முடியும் என 2ஜி அலக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.78 லட்சம் கோடி ஊழல் செய்தவர்கள் திமுகவின் ராசாவும், கனிமொழியும் தான்.

அவர்கள் மீது வழக்கை தொடுத்தது திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு தான். ராசாவும், கனிமொழியும் தியாகம் செய்தா திகார் சிறைக்கு சென்றார்கள். 2ஜி வழக்கில் ஆதாரம் நிருபிக்கப்படவில்லை என கூறி அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

போதிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி தான் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது சிபிஐ மேல் முறையிடு செய்துள்ளது. விரைவில் வழக்கு விசாரணைக்கு வரும். அப்போது தப்பிக்க முடியாது என்ற பயத்தில் தான் ஸ்டாலினும், ஆ.ராசாவும் பிதட்டுகின்றனர்.

கடந்த 2011 முதல் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருக்கிறது. இந்த 10 ஆண்டுகளும் திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுப்பினராக இருந்து எங்கள் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியும் எதையும் நிருபிக்க முடியாமல் வாபஸ் வாங்கிய நிலை தான் இருந்து வந்துள்ளது. சட்டப்பேரவையிலேயே எதையும் நிருபிக்க முடியாதவர்கள் மக்கள் மன்றத்தில் எப்படி நிருபிப்பார்கள். மக்களிடம் உண்மைக்கு மாறாக எதையும் சொல்ல முடியாது.

மக்கள் அவர்களை நம்பத் தயாராக இல்லை. ஊழல் என்றதும் மக்களுக்கு நினைவுக்கு வருவது திமுக தான். எனவே, ஊழல் பற்றி பேச திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை. 10 ஆண்டுகளாக அதிமுக சார்பில் அப்பழுக்கற்ற, தெளிவான, ஊழலற்ற ஆட்சி நடக்கிறது. ஊழல் பற்றி பேச பேச மக்களுக்கு திமுகவை பற்றிய மலரும் நினைவுகள் தான் வரும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுகவினர் சிறைக்கு செல்வார்கள் என ஸ்டாலின் பூச்சாண்டி காட்டுகிறார். மக்களின் மதிப்பை பெற்று 2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சியே மலரும். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சாதிக் பாட்ஷா கொலை வழக்கு, அண்ணா நகர் ரமேஷ் கொலை வழக்கு போன்ற வழக்குகளை தூசிதட்டி மீண்டும் விசாரிக்கும் போது ஸ்டாலினும் சிறைக்கு செல்லும் நிலை தான் ஏற்படும்.

வரும் 2021 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணியில் பல்வேறு மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் அதிமுக பக்கம் வருவார்கள்.

வரும் ஜனவரிக்கு பிறகு பல கட்சிகள் அதிமுகவை நோக்கி படையெடுத்து வருவதை பார்ப்பீர்கள். அதிமுக தலைமையிலான கூட்டணி மகத்தான கூட்டணியாக, வெற்றி கூட்டணியாக இருக்கும்.

எங்களை யாரும் மிரட்டவில்லை. மடியில் கனமில்லை, அதனால் எங்களுக்கு பயம் இல்லை. அவர்களுக்கு (திமுக) தான் பயம் என்றார் அமைச்சர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in