

மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே செயல்படும் கரிமேடு மீன் மார்க்கெட்டை, புறநகர் பகுதியான வெள்ளக்கல் பகுதிக்கு இடமாற்றம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்காக அங்கு ரூ.3 கோடியில் புதிய மீன் மார்க்கெட் அமைக்கத் திட்டம் தயார் செய்யப்படுகிறது.
தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா மீன் வியாபாரிகளை ஒருங்கிணைக்கும் தென் தமிழகத்தின் மிகப்பெரிய மீன் சந்தையாக மதுரை கரிமேடு மீன் மார்க்கெட் திகழ்கிறது.
தமிழக கடற்கரை மாவட்டங்களில் இருந்து மட்டுமில்லாது ஆந்திரா, கேரளாவில் இருந்தும் இங்கு தினமும் 200 வாகனங்களில் டன் கணக்கில் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன.
நள்ளிரவு தொடங்கும் மீன் வியாபாரம் அதிகாலையில் விற்று தீர்ந்து விடுகிறது. இந்த மொத்த மீன் மார்க்கெட் போக்குவரத்து நெரிசல் மிகுந்த புது ஜெயில் ரோட்டில் செயல்படுகிறது. இந்த சாலை வழியாக சிம்மக்கல், ஆரப்பாளையம், பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவு வாகனங்கள் வந்து செல்கின்றன.
ஆனால், இந்த சாலை கரிமேடு மார்க்கெட் பகுதியில் செல்லும்போது மிக குறுகலாக உள்ளதால் மீன் வாகனங்கள், வழக்கமான போக்குவரத்து வாகனங்களில் இந்த ரோட்டை மக்கள் கடந்து செல்ல முடியவில்லை.
மேலும், கடைகளில் மீன் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி சுகாதாரமாக வைத்துக் கொள்ளாததால் அப்பகுதியில் தூர்நாற்றமும் வீசுகிறது.
அதனால், வியாபாரிகளே கடந்த பல ஆண்டாக இந்த மார்க்கெட்டை வாகனங்கள் நிறுத்த வசதியுள்ள பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கரோனா ஊரடங்கில் தற்காலிகமாக தொற்று நோய் பரவுவதைத் தடுக்க இந்த மீன் மார்க்கெட் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே இடம் மாற்றம் செய்யப்பட்டது.
ஏற்கெனவே அங்கே சரக்கு லாரிகள் நிறுத்தும் இடம், அருகே பஸ்நிலையம், காய்கறி மார்க்கெட் என மக்கள் நடமாட்டம், வாகன நெருக்கமும் அதகிமாகக் காணப்படுகிறது.
அதனால், மீன் மார்க்கெட் செயல்பட்டதால் கரிமேடு போல் இப்பகுதியும் நெரிசலாவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கருதினர்.
அதனால், அவர்கள் இந்த மார்க்கெட் புறநகர் பகுதிக்கு இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால், மீன் வியாபாரிகள், தற்போதுள்ள தற்காலிமாக செயல்படும் மாட்டுத்தாவணி பகுதியை விட்டு நகர மாட்டோம், இதே பகுதியில் செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று உள்ளூர் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் நேரடியாக வலியுறுத்தினர்.
ஆனால், மீன்மார்க்கெட்டால் மாட்டுத்தாவணி பகுதி கரிமேடு போல் ஆகிவிடக்கூடாது என்பதில் மாநகராட்சி நிர்வாகம் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தற்போதைக்கு மீன் மார்க்கெட்டை மாட்டுத்தாவணியை விட்டு மாற்றும் எண்ணம் இல்லை. ஆனால், நிரந்தரமாக புறநகர் பகுதிக்கு கொண்டு செல்வதற்கு முடிவு செய்துள்ளோம். அதற்காக ரூ.3 கோடியில் வெள்ளக்கல் பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்க திட்டம் தயாரிக்கிறோம், ’’ என்றார்.