

மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகளின் சார்பில் தென்காசி மாவட்டத்தில் 4 இடங்களில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நிர்வாகிகள் வேல்முருகன், குணசீலன், தங்கம், உட்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர், மறியலில் ஈடுபட்ட 65 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல், இடைகால் தபால் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேரை இலத்தூர் போலீஸார் கைது செய்தனர்.
சிவகிரியில் பாலசுப்பிரமணியன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 139 பேரை போலீஸார் கைது செய்தனர். திருவேங்கடத்தில் வேணுகோபால் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மாவட்டம் முழுவதும் 4 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மொத்தம் 334 பேர் கைது செய்யப்பட்டனர்.