

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் மலைப்பகுதியில் ஈரப்பதம் அதிகரித்து ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுவருகிறது.
மரங்களும் சாய்கின்றன. பெருமாள்மலை- பழநி மலைச்சாலையில் அடிக்கடி மண்சரிவுகள் ஏற்படுவது தொடர்கிறது.
புரெவி புயலின்போது ஒரு நாள் முழுவதும் கொடைக்கானல் மலைச்சாலையில் பயணம் செய்ய வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் மேல்மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட காய்கறிகள் அதிகளவில் சேதமடைந்துள்ளது.
கூக்கால், பூம்பாறை, மன்னவனூர் பகுதிகளில் விளைவிக்கப்படும் பூண்டு, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், முள்ளங்கி, காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் அதிக மழையால் முற்றிலும் சேதமடைந்துவிட்டது.
நிலங்களில் மழைநீர் தேங்கியதால் காய்கறிகள் அழுகிவருகின்றன.
உழுத நிலங்களில் மழை நீர் அதிகம் தேங்கிநிற்பதால் பயிரிடமுடியாதநிலையிலும் விவசாயிகள் உள்ளனர்.
சில இடங்களில் விளைநிலங்களில் மண் சரிவு ஏற்பட்டு மீண்டும் பயன்படுத்த சீரமைக்க அதிக தொகை செலவாகும் என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
கொடைக்கானல் மேல்மலைப்பகுதிகளில் தொடர் மழையால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
மலைகிராமங்களில் ஒருசில இடங்களில் தொடர் மழைக்கு வீட்டுசுவர்கள் இடிந்துவிழுந்தன. இருந்தபோதிலும் எந்தவித பாதிப்பும் இல்லை.
பழநி சாலையில் மண் சரிவு தொடர்வதால் வாகனங்களில் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.