Published : 09 Dec 2020 04:14 PM
Last Updated : 09 Dec 2020 04:14 PM
தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு 20% முன்னுரிமை ஒதுக்கீடு சட்டத் திருத்தத்திற்கு தொடர்ந்து குரல் கொடுத்து, சட்டம் நிறைவேற்றிடக் காரணமாய் இருந்ததாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து திமுக தரப்பில் இன்று வெளியிட்ட தகவல்:
“பட்டப்படிப்புத் தகுதிக்கான அரசுப் பணிக்கு, பட்டப்படிப்பிற்கு முன்பு 10 மற்றும் 12ஆம் வகுப்புகளையும், 10ஆம் வகுப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும்” என்று கடந்த மார்ச் மாதம் தமிழகச் சட்டப்பேரவையில் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றி அனுப்பப்பட்டது.
சட்டத் திருத்த மசோதாவை ஏறக்குறைய 8 மாதங்களாக, தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது. தொடக்கத்திலிருந்து தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க மார்ச் 16ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்டத் திருத்தத்திற்கு உடனடியாகத் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என திமுக தலைவர் ஸ்டாலின் டிச.6 அன்று அறிக்கை விடுத்ததன் காரணமாக, தமிழக ஆளுநர் தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு 20% முன்னுரிமை ஒதுக்கீடு சட்டத் திருத்தத்திற்குக் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதையடுத்து இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனியார் சிவில் தேர்வு பயிற்சி மையப் பயிற்சியாளர் தலைமையில், டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு, தமிழ்வழியில் பயிலும் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு 20% முன்னுரிமை ஒதுக்கீடு சட்டத் திருத்தம் நிறைவேற்றிட குரல் கொடுத்ததற்காக திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்”.
இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT