

தமிழக முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை அவதூறாகப் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோர் மீது தலைவர்களுடன் ஆலோசித்து வழக்குத் தொடர்வேன் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இன்று அளித்த பேட்டி:
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி முதல்வர் பழனிசாமி என்ற கோஷத்தோடு மிகப்பெரிய வெற்றியைப் பெரும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் களத்தில் இறங்கி மக்களை சந்திக்கின்ற தலைவரை தான் இந்த நாடு எதிர்பார்க்கிறது. கம்ப்யூட்டரில் பேசிக் கொண்டிருக்கும் தலைவரை இந்த நாடு எதிர்பார்க்கவில்லை.
அதிகாரங்களை விட்டுவிட்டு களத்தில் போராடுபவர்கள் மக்களோடு மக்களாக விவசாயிகளாக அதிமுகவினர் போராடுகிறார்கள்.
ஸ்டாலினை கைது செய்யக்கோரி மனு கொடுக்கப் போகிறேன். முதல்வர் பழனிசாமியுயம் முன்னாள் முதல்வர் ஜெயலிதாவையும் அவதூறாக பேசியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கட்சித் தலைவர்களுடன் பேசி ஒப்புதல் பெற்ற வழக்கு தொடரப் போகிறேன்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கறிஞராக இருந்த ஜோதி, ஒரு சரியான சட்ட நிபுணர். நாயத்தின் பக்கம் தான் பேசுபவர். அவருடைய வாதத்திலும் நேருக்கு நேராக ராசாவுடன் விவாதம் செய்ய அண்ணா அறிவாலயம் வரத் தயார் என்று கூறினார்.
ஆ.ராசாவும் சவாலை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே? என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக ராஜபாளையத்தில் அவர் அளித்த பேட்டியில், இஸ்லாமியர்களை ஏமாற்றி இனியும் திமுக ஓட்டு வாங்க முடியாது. சாதிக் பாட்ஷா மரணத்திற்கு திமுக பதில் சொல்லியே ஆகவேண்டும்.
ஸ்டாலின் பேச்சு வேதனை அளிப்பதாக உள்ளது. கலவரத்தை திமுக தொடர்ந்து கையில் எடுக்குமேயானால் வரும் 2021-ல் திமுக படுதோல்வியை சந்திக்கும்.
தேர்தல் பயத்தில்தான் திமுகவினர் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.