புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள்  பயணிக்க அனுமதிக்க வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள்  பயணிக்க அனுமதிக்க வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்
Updated on
1 min read

கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், புறநகர் பகுதியிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் வசதிக்காகப் புறநகர் ரயிலில் மாணவர்கள் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலானது. அனைத்து பொதுப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதில் சென்னையில் முக்கியமான மூன்று போக்குவரத்துகள் புறநகர் ரயில் சேவை, மெட்ரோ ரயில், அரசுப் பேருந்து சேவை ஆகியவை ஆகும்.

கரோனா தீவிரம் குறைந்த நிலையில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது மெட்ரோ ரயில், பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மிகத் தாமதமாக புறநகர் ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

வெளிமாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டிலிருந்து சென்னைக்குக் கல்வி பயில, சொந்த வேலைகள், பணி நிமித்தம் காரணமாக வரும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவதும், மலிவானதுமான சேவை புறநகர் ரயில் சேவைதான். சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை கடற்கரை - திருமால்பூர், சென்ட்ரல்- திருத்தணி, சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல்-திருவள்ளூர், சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல்- சூளூர்பேட்டை எனப் புறநகர் ரயில் சேவைகள் பொதுமக்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இந்தப் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கினாலும் இன்று வரை முழுமையாக இயக்கப்படவில்லை. அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், அத்தியாவசியப் பணிக்குச் செல்பவர்கள் மட்டுமே பயணிக்கின்றனர். தற்போது கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பெண்கள், குழந்தைகள் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

சாதாரண மக்களும், கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களும் பயன்படுத்த அனுமதி இல்லை. தற்போது கல்லூரிகள் தொடங்கி இயங்கும் நிலையில், புறநகர் ரயில்களில் மாணவர்கள் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச் சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in