

விருதுநகரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆதித் தமிழர் கட்சியினர் 42 பேரை போலீஸார் இன்று கைதுசெய்தனர்.
டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய 3 வேளாண் சட்டங்களை வாபஸ்பெறக் கோரியும் மத்திய அரசைக் கண்டித்தும் விருதுநகரில் ஆதித் தமிழர் கட்சியினர் மாவட்டத் தலைவர் வசந்தன் தலைமையில் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இப்போராட்டத்திற்கு மாநில தலைமை நிலைய உறுப்பினர் விஸ்வை குமார், மாவட்ட நிதி செயலர் வேல்முருகன், மாவட்ட அமைப்புச் செயலர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரயில் நிலைய முகப்பிலிருந்து அக்கட்சியினர் ஏராளமானோர் திரண்டு கையில் நெற்கதிர்களுடன் பேரணியாக ரயில் நிலையம் வந்தனர்.
அப்போது, மத்திய அரசைக் கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய 3 வேளாண் சட்டங்களை வாபஸ்பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
அதையடுத்து, ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றபோது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி 15 பெண்கள் உள்பட 42 பேரை கைதுசெய்தனர்.