

கடலூர், கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் வெள்ள மீட்பு குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 3 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்டத்தில் புரெவி புயலால் கடந்த 6 நாட்களாகக் கனமழை பெய்தது. தாழ்வான குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியது. வேளாண் பயிர்களும் மூழ்கின. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து முகாம்களில் பொதுமக்களைத் தங்க வைத்து உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தது.
இதற்கிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடலூரில் பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, பொது மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.
இந்த நிலையில் இன்று கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி, சட்டத்துறை அமைச்சர் சண்முகம், தொழில்துறை அமைச்சர் சம்பத் ஆகியோர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டக் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி, சிறப்பு அதிகாரிகள் ராஜேஷ், விசு மஹாஜன், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி, எஸ்பி ஸ்ரீ அபினவ், மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர் திருமாறன் மற்றும் அனைத்துத் துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் சகாமூரி, ''நிவாரணம் குறித்த கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கி உள்ளோம். எவ்வாறு கணக்கெடுப்பது என்பது குறித்து ஒன்றிய அலுவலர்களிடம் விளக்கிக் கூறப்பட்டுள்ளது. சேத மதிப்புகளைத் தவறவிடாமல் அனைத்துப் பகுதிகளையும் கணக்கெடுப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கீரப்பாளையம் அருகே பொன்னேரி, இடையன் பால்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.