

ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுக்கு அதன் நிர்வாகி சுதாகர் தொலைபேசி வாயிலாக உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் சூடு பிடித்துள்ளது. அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. இவர்களுடன் ரஜினியும் கட்சி தொடங்கித் தேர்தலில் களம் காணவுள்ளார்.
டிசம்பர் 3-ம் தேதி தனது அரசியல் வருகையை ரஜினி உறுதி செய்தார். ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ளதாகவும், டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ரஜினி. தற்போது கட்சி ஆரம்பிப்பது தொடர்பாகத் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி மற்றும் கட்சி மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பாக சுதாகர் அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் தொலைபேசி வழியே பேசியுள்ளார். அதில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ஒட்டப்படும் போஸ்டர்களில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் ஆகியோரது புகைப்படமோ அல்லது தனது புகைப்படமோ இடம்பெறக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
ரஜினியின் புகைப்படத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். அதோடு அந்த ஊர் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், தற்போது தனது மன்ற நிர்வாகிகளுடன் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார் ரஜினி.