

திமுகவின் தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, திமுக எம்.பி. திருச்சி சிவா விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பொதுமக்களை சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் திமுக சார்பில் தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
இதில், திருச்சி சிவா எம்பி கலந்து கொண்டார். முன்னதாக அவர், அருப்புக்கோட்டையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மாற்றுத் திறனாளிகளுக்கு நிதி உதவி வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கினார்.
அதைத் தொடர்ந்து ஜவுளிக் கடை உரிமையாளர்கள், நகைக் கடை உரிமையாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட த்தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களை சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார்.
அவர்களின் கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்றும், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இக்கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் திருச்சி சிவா எம்.பி தெரிவித்தார்.
அப்பொழுது திமுக தெற்கு மாவட்டச் செயலர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.