

ஆயுர்வேத மருத்துவர்கள்அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் தர்ணா, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம். சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி ஆகிய ஆயுஷ் மருத்துவ முறைகள் மற்றும் அலோபதி மருத்துவம் (ஆங்கில மருத்துவம்) ஆகியவற்றை ஒன்றாக இணைப்பது என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கு இந்தியாமுழுவதும் அலோபதி மருத்துவர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த அறிவிப்பை ரத்து செய்யவலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் இந்தியா முழுவதும் நேற்று மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டம் நடைபெற்றது.
ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.பாலகிருஷ்ணன் தலைமையில் சென்னை ஸ்டான்லிமருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளையின் மாநில இணைச்செயலாளர் அன்பரசு, அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.
மருத்துவர் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
மத்திய அரசு கொண்டுவரும் கலவை மருத்துவத்தால் மக்கள்கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.முறையான பயிற்சி இல்லாமல் ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் நோயாளிகள் கடும் பாதிப்பை சந்திப்பார்கள். விமானத்தை இயக்க பைலட்கள் இல்லை என்றால், கார் ஓட்டுநரை வைத்து விமானத்தை இயக்கலாம் என்பதுபோல் உள்ளது மத்திய அரசின் இந்த அறிவிப்பு.
மத்திய அரசு இதுதொடர்பான அரசாணையை திரும்பப்பெற வேண்டும். இதை செயல்படுத்த நிதி ஆயோக் அமைத்துள்ள குழுக்களையும் கலைக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தீவிரமடையும்.
கோரிக்கையை வலியுறுத்தி வரும் 11-ம் தேதி காலை 6 முதல் மாலை 6 மணி வரை பணிகள் புறக்கணிப்பு போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் சங்கம் கலந்தாலோசித்து முடிவு அறிவிக் கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.