Published : 09 Dec 2020 03:14 am

Updated : 09 Dec 2020 06:54 am

 

Published : 09 Dec 2020 03:14 AM
Last Updated : 09 Dec 2020 06:54 AM

கரோனா உச்சகட்டத்தில் இருந்தபோது இந்தியாவும், பிரான்ஸும் பரஸ்பரம் உதவியது உணர்வுப்பூர்வமானது: சென்னையில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் நெகிழ்ச்சி

france-ambassador-to-india
இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் மற்றும் தூதரக உயர் அதிகாரிகள் சென்னை அண்ணா சாலையில் உள்ள‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலைமை அலுவலகத்தை நேற்று பார்வையிட்டபின் செய்தியாளர்களை சந்தித்தனர்.படம்: ம.பிரபு

சென்னை

கரோனா உச்சகட்டத்தில் இருந்தபோது இந்தியாவும், பிரான்ஸும் பரஸ்பரம் ஒன்றுக்கு ஒன்று உதவிய செயல் உணர்வுப்பூர்வமானது என்று சென்னை வந்துள்ள இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

சென்னை வந்துள்ள இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் மற்றும் தூதரகஉயர் அதிகாரிகள், அண்ணா சாலையில் உள்ள ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலைமை அலுவலகத்தை நேற்று பார்வையிட்டனர். அப்போது இம்மானுவேல் லெனைன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எனது பணிக்காலத்தில் 2-வதுமுறையாக தமிழகம் வந்துள்ளேன். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கும் பிரான்ஸுக்கும் இடையே நீண்டநெடிய வரலாறு உண்டு.

தமிழகத்துக்கும் பிரான்ஸுக்கும் இடையே அதிக அளவில் வியாபாரத் தொடர்புகள் இருந்து வருகின்றன. இந்தியாவில் பிரான்ஸ் தொழில் நிறுவனங்கள் அதிகம் முதலீடு செய்துள்ள முதன்மை மாநிலம் தமிழகம்தான். தமிழகத்துக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான வர்த்தக வாய்ப்புகளை அதிகரிப்பதும், பிரான்ஸ் கல்வி நிறுவனங்களுக்கு வருகை தரும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் எனது தமிழக வருகையின் முக்கிய நோக்கம்.

கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து மேற்படிப்புக்காக எங்கள்நாட்டுக்கு 10 ஆயிரம் மாணவர்கள்வந்தனர். வரும் காலத்தில் இதுகணிசமாக உயரும் என நம்புகிறேன். தற்போது தமிழகத்தில் 140 பிரான்ஸ் நிறுவனங்கள் உற்பத்தி துறையில் முதலீடு செய்துள்ளன.

கரோனா தொற்று நேரத்தில் இந்தியாவும், பிரான்ஸும் பரஸ்பரம் ஒன்றுக்கு ஒன்று உதவிசெய்தன. கரோனா சிகிச்சைக்குதேவையான ஹைட்ரோகுளோரோகுயின், பாரசிட்டமால் மருந்துகளைஇந்திய அரசு, பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு தேவையான அளவு அனுப்பி வைத்தது.

இந்த உதவிக்கு கைம்மாறாக எங்கள் நாட்டு அரசு, இந்தியாவுக்கு வென்டிலேட்டர்கள், பரிசோதனை சாதனங்கள், பாதுகாப்பு முகக் கவசங்கள் மற்றும் ராணுவ மருத்துவர்களை அனுப்பி வைத்தது. ஒருஇக்கட்டமான சூழலில் பரஸ்பரம்ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு உதவி செய்தது உணர்வுப்பூர்வமானது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு உச்சகட்டத்தில் இருந்தபோது மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ சாதனங்களை பிரான்ஸ் தொழில் நிறுவனங்கள் உருவாக்கி கொடுத்தன. குறிப்பாகரெனால்டு நிறுவனம் வென்டிலேட்டர்கள் தயாரிப்பில் பெரிதும் உதவியது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரான்ஸின் நிலைப்பாடு

கரோனா பாதிப்பு, அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் - இத்தகைய புதிய உலக சூழலில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் பிரான்ஸ் நாட்டின் நிலைப்பாடு குறித்து அவரிடம் கேட்டபோது, “எந்த ஒரு நாடும் குறிப்பிட்ட சிலநாடுகளை சார்ந்து இருக்க முடியாது என்பதுதான் கரோனா மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடம். எங்குதொழில் தொடங்குவதற்கு இணக்கமான, சாதகமான சூழல் நிலவுகிறதோ அங்கு தொழில் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும். அந்த வகையில் எங்களின் தேர்வு பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

காரணம் இரண்டும் ஜனநாயக நாடுகள். இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட கால பிணைப்பு இருக்கிறது. பொக்ரானில் இந்தியாஅணுகுண்டு சோதனை நடத்தியபோது பல்வேறு நாடுகள் இந்தியாவின் நிலையை விமர்சித்தபோது, இந்தியாவை பிரான்ஸ் ஆதரித்தது. கார்கில் போர் விஷயத்திலும் இந்தியாவுக்கு ஆதரவாக நின் றோம்” என்றார்.

கரோனா சூழலால் ரஃபேல் போர்விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்படுமா?என்ற கேள்விக்கு, “இதுவரை 15ரஃபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தப்படி, 36 ரஃபேல் விமானங்களும் 2022-ம் ஆண்டில் இந்தியாவிடம் வழங்கப்பட்டு விடும். கரோனா காரணமாக பிரான்ஸிலும் பொது ஊரங்கு அமல்படுத்தப்பட்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

இருப்பினும் பிரான்ஸ் பாதுகாப்பு தொழில் நிறுவனங்கள் தினமும் கூடுதல் நேரம் பணியாற்றி வருகின்றன. எனவே, திட்டமிட்டபடி ரஃபேல் விமானங்கள் குறித்த காலத்தில் வழங்கப்படும்” என்றார்.

கரோனாஇந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர்பிரான்ஸ் தூதர் நெகிழ்ச்சிFrance ambassador to india

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x