தமிழகத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு- கடலூர் மாவட்டத்தில் சேதங்களைப் பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு- கடலூர் மாவட்டத்தில் சேதங்களைப் பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று கடலூர் மாவட்டத்தில் புயல் சேதங்களைப் பார்வையிட்ட தமிழக முதல்வர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

கடந்த மாதம் 25-ம் தேதி ’நிவர்’ புயலால் பெய்த பெரு மழையால் கடலூர் மாவட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், அடுத்து வந்த ‘புரெவி’ புயலால் மேலும் கடும் பாதிப்பை எதிர் கொண்டுள்ளது. ஏற்கெனவே கடலூர் மாவட்டத்தின் பாதிக்கப்பட்ட வயல்வெளிகளை முதல்வர் பழனிசாமி கடந்த 26-ம் தேதி பார்வையிட்டார்.

இதற்கிடையே, புரெவி புயலின் பாதிப்பை அறிய நேற்று மீண்டும் முதல்வர் கடலூர் மாவட்டத்துக்கு வருகை தந்தார். கடும் மழையால் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அணுக்கம்பட்டு, ஆலப்பாக்கம் ஆகிய இடங்களில் சேதமடைந்த பயிர்கள் மற்றும் அப்பகுதி நெடுஞ்சாலைகளையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் வடிகால் மதகான வெள்ளியங்கால் ஓடையை பார்வையிட்டார். தொடர்ந்து திருநாரையூர் கிராமத்தில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்புப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சிதம்பரத்தில் சேதமடைந்த இளமையாக்கினார் கோயில் குளக்கரை, சாலியன் தோப்பில் மழையால் சேதமடைந்த நெல் வயல்கள் மற்றும் காட்சிக்கு வைக்கப்பட்ட வெள்ளத்தால் சேதம் அடைந்த நெற்பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகளை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்துவல்லம்படுகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடையே பேசிய முதல்வர் பழனிசாமி, “அடுத்தடுத்து வந்த 2 புயல்களால் பெய்த கனமழையால் கடலூர் மாவட்டத்தில் அதிக இடங்களில் நெல், வாழை, கரும்பு, கடலை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனது உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு மீட்புப் பணிகளை மேற்கொண்டது. இருப்பினும், பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளது.

மத்தியக் குழுவிடம் வலியுறுத்தல்

மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியுள்ளன. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது.

பாதிப்பை மத்திய குழு பல்வேறு இடங்களில் ஆய்வு செய்துள்ளது. சென்னையில் நடந்த கூட்டத்தில் அவர்களிடம் பாதிப்புக்கான தொகையை கேட்டுள்ளோம். அது கிடைக்கும் என்று நம்புகிறோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீட்டை வழங்கும்” என்று கூறினார்.

முதல்வருடன் ஆய்வின் போது அமைச்சர்கள் சி.வி.சண்முகம், பி.தங்கமணி, எம்.சி.சம்பத், எம்எல்ஏக்கள் பாண்டியன், முருகுமாறன், சத்யா பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங்பேடி, சிறப்பு அதிகாரி ராஜேஷ், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி இன்று திருவாரூர், நாகை மாவட்டங்களில் வெள்ளபாதிப்புகளை பார்வையிடுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in