

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் உள்ள குறைபாடு களை 2 மாதத்துக்குள் சரி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் சென்னை கோட்டூர்புரத்தில் திறக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சரிவர பராமரிக்கப்படவில்லை என்றும் அந்த நூலகத்தை முறையாகப் பராமரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பேராசிரியை மனோன்மணி வழக்கு தொடர்ந்தார்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. இந்த நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக வழக்கறிஞர்கள் பி.டி ஆஷா, எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட குழுவை நீதிபதிகள் நியமித்தனர்.
அதன்படி, நூலகத்தை ஆய்வு செய்து குழு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையைப் பார்த்த நீதிபதிகள், “நூலகப் பராமரிப்புப் பணிகளை அதிகாரி கள் விரைவாகச் செய்ய வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியதற் கான அறிக்கையை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர். அதன்பிறகும் நூலகத்தில் உள்ள குறைகள் முழுமையாக சரிசெய்யப்படாததால், அரசுக்கு 4 வாரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, நீதிமன்றம் போதிய அவகாசம் அளித்த பிறகும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் உள்ள குறைபாடுகள் முழுமையாக சரி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். நூலகத்தை ஆய்வு செய்த குழு, தனது இரண்டாவது அறிக்கையை தாக்கல் செய்தது.
அதையடுத்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு:-
குழுவின் அறிக்கையைப் பார்க்கும்போது, நூலகத்தில் சில பணிகள் நடந்துள்ளன. மேலும் சில பணிகள் நடக்கவேண்டியுள்ளன. பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராவைப் பொருத்தவரை அயல்பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவை இயங்கவில்லை. புதிதாக புத்தகங்கள் வாங்குவது, மின்னணு நூலகம் ஆகியவை உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்க வேண்டும். பசுமை நிலப்பரப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். கருத்தரங்க அறை, உணவகம், தியேட்டர் ஆகியவற்றில் முக்கியப் பணி நடந்துள்ளது. ஆனால், அவற்றை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எங்களைப் பொருத்தவரை, நூலகத்தில் பாதுகாப்பில் குறைபாடு உள்ளது. பாதுகாப்புப் பணிக்காக ஆண்டுக்கு ரூ.2.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த தொகை எதற்காக செலவிடப்பட்டது என்பதை அறிய விரும்புகிறோம். நூலகப் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இருக்கக்கூடாது.
2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ரூ.31.66 கோடி வரியை (செஸ்) சென்னை மாநகராட்சி வசூலித்துள்ளது. இத்தொகையில், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை தெரிவிக்க வேண்டும். நூலகத்தில் மீதமுள்ள பணிகளை 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும். வழக்கு விசாரணை ஜனவரி 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.