கரோனா கால பிரசவங்கள்: கோவை அரசு மருத்துவமனையில் மட்டுமே 60 சதவீதம்

கோவை அரசு மருத்துவமனையின் ஒருங்கிணைந்த அவசரக்கால தாய்-சேய் தீவிர சிகிச்சைப் பகுதி.
கோவை அரசு மருத்துவமனையின் ஒருங்கிணைந்த அவசரக்கால தாய்-சேய் தீவிர சிகிச்சைப் பகுதி.
Updated on
1 min read

கரோனா காலத்தில் மாவட்டத்தில் நிகழ்ந்த பிரசவங்களில் 60 சதவீதப் பிரசவங்கள் கோவை அரசு மருத்துவமனையில் மட்டுமே நிகழ்ந்துள்ளதாக மருத்துவமனையின் டீன் டாக்டர் காளிதாஸ் தெரிவித்தார்.

கடந்த மார்ச் முதல் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியதையடுத்து, கர்ப்பிணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தின. கரோனா அச்சம் காரணமாகப் புறநகரில் இருந்த பல சிறிய தனியார் மருத்துவமனைகள் கர்ப்பிணிகளை அனுமதிக்க மறுத்தன. அங்கு ஆலோசனை பெற்றுவந்த கர்ப்பிணிகள் பலர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், பிரசவத்தின்போது சிக்கல் ஏற்படும் என்று கருதி தனியார் மருத்துவமனைகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கர்ப்பிணிகளும் அடங்குவர். இதனால், கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் நவம்பர் இறுதி வரை 10,919 கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில், கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் 7,241 பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன.

இது தொடர்பாக மருத்துமனையின் டீன் டாக்டர் பி.காளிதாஸ் கூறும்போது, "கோவை மட்டுமல்லாது, திருப்பூர், நீலகிரி, சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிகள் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த மார்ச் முதல் கோவை மாவட்டத்தில் நிகழ்ந்த பிரசவங்களில் 60 சதவீதப் பிரசவங்கள் கோவை அரசு மருத்துவமனையில் மட்டுமே நிகழ்ந்துள்ளன. எஞ்சியுள்ள 40 சதவீதப் பிரசவங்கள்தான் இதர அரசு, தனியார் மருத்துவமனைகளில் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டை விட இந்த எண்ணிக்கை அதிகமாகும்.

மேலும், கடந்த மார்ச் மாதம் முதல் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 559 கர்ப்பிணிகளைக் காப்பாற்றியுள்ளோம். இதில் மருத்துவமனையின் மகளிர், மகப்பேறு மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் மனோன்மணி, இதர துறை மருத்துவர்கள், செவிலியர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in