குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை. அதை முறையாக அமல்படுத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் பச்பன் பச்சோ அந்தோலன் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ''குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில் 2015-ல் இயற்றப்பட்ட (சிறார் நீதி) குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் கண்டிப்புடன் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருந்தும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இச்சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் (சிறார் நீதிச் சட்டம்) வரையறுத்துள்ள தரத்தின் அடிப்படையில் சிறுவர்கள் காப்பகம் இல்லை.

குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படுவதை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் பல மாவட்டங்களில் சிறார் நீதி வாரியம், குழந்தைகள் நல ஆணையத்தில் பதவிகள் காலியாக உள்ளன.

சிறார் நீதி வாரியத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாவட்டந்தோறும் சிறப்பு சிறார் காவல் பிரிவு, சிறார் நலக் காவல் அதிகாரியை நியமிக்க வேண்டும். இந்த நியமனங்களுக்குப் பின்பற்றப்படும் நடைமுறை என்ன? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

சிறார்களின் மறுவாழ்வுக்கு விரிவான வரைவு வழிகாட்டி விதிகளை வகுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து சிறார் காப்பகங்களிலும் சமூகத் தணிக்கை செய்யக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஜனவரி 20-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in