

மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக குமரி மாவட்டத்தில் இன்று 22 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 1200 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட், மற்றும் கூட்டணி கட்சியினர் முழு அடைப்பு, மற்றும் சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில் குமரி மாவட்டத்தில் அனைத்து போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்தும் இன்று பேரூந்துகள் வழக்கம்போல் இயங்கின.
இதைப்போல் கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கும், குமரியில் இருந்து கேரளாவிற்கும், வெளியூர்களுக்கும் செல்லும் பேரூந்துகள் போக்குவரத்து பாதிப்பின்றி இயங்கின. குமரியில் உள்ள 12 போக்குவரத்து கழக பணிமனைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.
நாகர்கோவில், மார்த்தாண்டம், கன்னியாகுமரி, திங்கள்சந்தை என மாவட்டம் முழுவதும் பரவலாக பெரும்பாலான கடைகள் திறந்தே இருந்தன. லாரிகள், மற்றும் கனரக வாகனங்கள் வெளியூர்களில் இருந்து வரவில்லை.
குளச்சல், குழித்துறை, அருமனை, தக்கலை போன்ற பகுதிகளில் சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குமரி மாவட்டத்தில் முழு அடைப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்வில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
நாகர்கோவில், தக்கலை, கருங்கல், குளச்சல், குலசேகரம், நித்திரைவிளை, மேல்புறம், கொல்லங்கோடு, திட்டுவிளை என மாவட்டம் முழுவதும் 22 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக, மதிமுக என கூட்டணி கட்சியினர் வேளாண் சட்டத்தை எதிர்த்து சாலை மறியல், மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 1200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் அகமது உசேன், கட்சி நிர்வாகிகள் அந்தோணி உட்பட திரளானோர் கலந்துகொண்டனர். குளச்சலில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., தலைமையிலும், கருங்கல்லில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., தலைமையிலும் சாலை மறியல் நடைபெற்றது.
முழு அடைப்பை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் முக்கிய சந்திப்பு, மக்கள் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வங்கி ஊழியர் சங்கத்தினர் முழு அடைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வங்கிகரில் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.