மத்திய அரசின் ஆயுஷ், அலோபதி கலப்பட மருத்துவ முறை அறிவிப்புக்கு எதிர்ப்பு; கோவையில் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்ட தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்ட தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர்.
Updated on
1 min read

மத்திய அரசின் ஆயுஷ், அலோபதி கலப்பட மருத்துவ முறை அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அரசு மருத்துவமனை, சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று (டிச. 08) அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் கோவை கிளைத் தலைவர் ரவிசங்கர் கூறியதாவது:

"ஆயுஷ் என்று கூறப்படும் சித்த, ஆயுர்வேத, யோகா மற்றும் யுனானி மருத்துவர்களுக்கு நவீன மருத்துவத்தின் எம்.எஸ்., எம்.டி., போன்ற சிறப்பு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு வழிவகை செய்யும் அறிவவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அதை செயல்படுத்த இசைந்துள்ளது.

அரசுக்கு சிறப்பு மருத்துவர்கள் தேவை இருப்பின் முந்தைய ஆண்டுகளில் செய்ததைப்போல ஒவ்வொரு பிரிவிலும் அதிகமான பட்ட மேற்படிப்பு இடங்களை அனுமதிக்கலாம். மேலும், நவீன மருத்துவத்தில் வெளிநாடுகளில் படித்துவிட்டு, தகுதித் தேர்வுக்காகக் காத்திருக்கும் இளநிலை மருத்துவ மாணவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். இவர்களைத் தகுதித்தேர்வு வழியாக அனுமதிக்கலாம்.

அரசுக்கு சிறப்பு மருத்துவர்கள் அதிகம் தேவைப்படும் நிலையில், அதிக அளவு முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களை நவீன மருத்துவ முறை மருத்துவக் கல்லூரிகளில் தொடங்குவது நல்ல தீர்வு. தமிழகத்தில் 700 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளார். அதற்கு ஈடாக அதிக முதுநிலை மருத்துவம் பயின்ற மருத்துவர்களும் உள்ளனர்.

எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்த ஆயுஷ், அலோபதி கலப்பட மருத்துவ முறையைக் கைவிட வேண்டும். தமிழக அரசு இதற்கு எதிராகச் சட்டம் இயற்றி கலப்பட மருத்துவ முறையிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும்".

இவ்வாறு ரவிசங்கர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in