

மின்துறை தனியார்மயத்தை அரசு ஏற்காது, நிர்வாகிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய அரசைச் சந்திப்போம் என்று உறுதி தந்ததையடுத்து, முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஐந்து நாட்களாக நடந்த மின்துறை ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
புதுச்சேரி மின்துறையைத் தனியார் மயமாக்க இருப்பதாக மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இதனைத் தடுத்து நிறுத்த மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி அரசு மின்துறை தனியார் மயமாக்குவதை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தது. இதனையடுத்து, மின்துறை ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாத இறுதியில் மின்துறையை கார்ப்பரேஷனாக மாற்றுவதற்கான அறிக்கையைத் தயாரித்து சமர்ப்பிக்கும்படி புதுச்சேரி அரசுக்குக் கோப்பு அனுப்பியுள்ளது. அதன்படி, அறிக்கை தயாரித்து வழங்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதுகுறித்து அறிந்த மின்துறை ஊழியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்து போராட்டம் மேற்கொள்ளத் தொடங்கினர்.
கனமழையின் காரணமாக புதுச்சேரியில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடை மின்துறை ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாகச் சீரமைக்கப்படாமல் இருந்தது. இதனால் பல இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
மின்துறை போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த தலைமைச் செயலாளர் அஸ்வினி குமாருக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, நேற்று (டிச. 07) இரவு பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அது தோல்வியில் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து, ஐந்தாவது நாளாக இன்றும் (டிச. 08) போராட்டம் தொடர்ந்தது.
அதைத் தொடர்ந்து, மின்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரி மின்துறை லாபகரமாகச் செயல்படுகிறது. இதை தனியார் மயமாக்குவதை அரசு ஏற்காது. இது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த, மின்துறை சங்க நிர்வாகிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்கிறேன். அதுவரை உங்களது போராட்டத்தைக் கைவிடுங்கள்" என்று கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட மின்துறை அதிகாரிகள், ஊழியர்கள் தங்களது தொடர் போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்பியதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.