

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 13 நாட்களாக முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ராமேசுவரம் அருகே பாம்பன் கடலில் மீனவர்கள் கடலில் இறங்கி செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து பலத்த எதிர்ப்புக்கிடையே நாடாளுமன்றத்தில் அதை நிறைவேற்றியது.
அதை எதிர்த்து கிளர்ந்தெழுந்த பஞ்சாப், ஹரியாணா, உ.பி. உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் திரண்டு கடுங்குளிருக்கும் மத்தியிலும் 13-வது நாளாக முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி செவ்வாய்கிழமை நாடு தழுவிய பந்த் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு ஆதரவாக ராமேசுவரம் அருகே பாம்பன் கடலில் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு நாட்டுப் படகு மீனவர்கள் பிரதிநிதி ராயப்பன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான மீனவர்கள் தங்களின் கைகளில் கருப்பு கொடிகளுடன் கடலில் இறங்கி தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.
ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக அவைத் தலைவர் ஏ.கே.என் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகாச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தங்கச்சிமடத்தில் மாவட்ட குழு உறுப்பினர் இ.ஜஸ்டின், தலைமையில் பேரணி மறியல் போராட்டம் நடைபெற்றது. பேரணியை துவக்கி வைத்து கட்சியின் தாலுகா செயலாளர் ஜி. சிவா உரையாற்றினார். மறியலில் ஈடுபட்ட சுமார் நூறு பேர் கைது செய்யப்பட்டனர்.