

தூத்துக்குடியில் இன்றும் சுமார் 3 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் இன்று ஒரே நாளில் 7 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீண்டும் கனமழை:
வங்கக்கடலில் உருவான புரெவி புயலின் தாக்கம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக தூத்துக்குடி மாநகரின் பல பகுதிகளை ஏற்கெனவே வெள்ளம் சூழந்திருந்த நிலையில் இன்று காலையில் சுமார் 3 மணி நேரம் கனமழை பெய்தது. அதிகாலை 5 மணியளவில் தொடங்கிய மழை காலை 8 மணி வரை நீடித்தது.
தூத்துக்குடியில் ஏற்கனவே தேங்கிய மழைநீரை வெளியேற்ற முடியாமல் மாநகராட்சி பணியாளர்கள் திண்டாடி வரும் நிலையில் இன்று பெய்த கனமழை, மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி சிதம்பரநகர், பிரையண்ட் நகர், போல்டன்புரம், மாசிலாமணிபுரம், அண்ணாநகர், டூவிபுரம், லூர்தம்மாள்புரம், பூபால்ராயர்புரம், செயின்ட் மேரீஸ் காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, கேடிசி நகர், செல்வநாயகபுரம், முத்தம்மாள் காலனி, தபால் தந்தி காலனி, ஆசிரியர் காலனி, கதிர்வேல் நகர், ராஜீவ் நகர், கால்டுவெல் காலனி, வெற்றிவேல்புரம், சாமுவேல்புரம், சின்னக்கண்ணுபுரம், பாத்திமாநகர், முத்தையாபுரம், அத்திரமரப்பட்டி, குறிஞ்சிநகர் உள்ள நகரின் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
வீடுகளுக்குள் தண்ணீர்:
பல இடங்களில் நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு உள்ளேயே மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. மக்கள் போராடி மழைநீரை வெளியேற்றினாலும் தொடர் மழை காரணமாக தொடர்ந்து வீடுகளுக்குள் மழைநீர் தேங்கி வருகிறது.
இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழைநீர் தேங்கிய பகுதிகளில் உள்ள பலர் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு மேடான பகுதிகளில் உள்ள உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
நகரின் பெரும்பாலான தெருக்கள், சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். குறிப்பாக ஜார்ஜ் சாலை- திருச்செந்தூர் சாலை சந்திப்பு பகுதியில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியிருப்பதால் அந்த வழியாக செல்வோர் திண்டாடி வருகின்றனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும், சில சாலைகளை மிகவும் உயர்த்தி ஸ்மார்ட் சாலைகளாக மாற்றும் பணி நடைபெறுவதால் அருகேயுள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழந்துள்ளது.
அரசு அலுவலகங்கள்:
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்பு, வணிக வரி அலுவலகம், தென்பாகம் காவல் நிலையம் போன்ற நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. பழைய மாநகராட்சி அலுவலகம், புதிய மாநகராட்சி அலுவலக பகுதியில் உள்ள சாலைகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது.
இதனால் அலுவலர்கள், பணியாளர்கள் மட்டுமின்றி தினமும் வந்து செல்லும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகராட்சி, நாகர்கோவில் மாநகராட்சி, கம்பம், தேனி, போடி, சாத்தூர், அருப்புக்கோட்டை நகராட்சி போன்ற பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து கூடுதல் மோட்டார் பம்புகள், டேங்கர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, 154 ராட்சத மோட்டார்கள் மற்றும் 19 டேங்கர் லாரிகள், 5 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக கண்காணித்து வருகின்றனர்.
மாநகராட்சி பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி ராட்சத மோட்டார்கள் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் மழைநீரை உறிஞ்சி வெளியேற்றினாலும், தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் தொடர் மழையால் பெருக்கெடுக்கும் உற்றுநீரால் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் மாநகராட்சி பணியாளர்கள் திணறி வருகின்றனர்.
7 இடங்களில் மறியல்:
இதற்கிடையே குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் சூழந்ததால் பாதிப்படைந்த மக்கள் நகரில் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செயின்ட் மேரீஸ் காலனி, லூர்தம்மாள்புரம், ஸ்டேட் பாங்க் காலனி, செல்வநாயகபுரம், அம்பேத்கர் நகர், செயின்ட் தாமஸ் பள்ளி அருகே மற்றும் குறிஞ்சிநகர் 4-ம் கேட் அருகே என 7 இடங்களில் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என சாலைகளில் அமர்ந்து மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் மக்களை சந்தித்து சமாதானப்படுத்தினர். தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் மழைநீரை வெளியேற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் மக்களிடம் உறுதியளித்து வருகின்றனர். இதனால் மக்கள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மழை அளவு:
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): காயல்பட்டினம் 13, விளாத்திகுளம் 3, காடல்குடி 4, வைப்பார் 5, சூரன்குடி 13, கோவில்பட்டி 7, கழுகுமலை 2, கயத்தாறு 4, எட்டயபுரம் 25, சாத்தான்குளம் 3.6, ஸ்ரீவைகுண்டம் 8, தூத்துக்குடி 6 மி.மீ. மழை பெய்துள்ளது.