

விருதுநகர் மாவட்டத்தில் 14 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 893 இன்று கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் விருதுநகர் மாவட்டத்தில் 14 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேவர் சிலை அருகிலிருந்து பேரணியாக புறப்பட்டு தலைமை தபால் நிலையம் நோக்கிச் சென்றபோது போலீஸார் தடுத்து நிறுத்தி 193 பேரை கைது செய்தனர்.
விருதுநகரில் மதுரை சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோன்று ஸ்ரீவில்லிபுத்தூர், திருத்தங்கல், சாத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆலங்குளம், வத்திராயிருப்பு, கீழராஜகுலராமன், திருச்சுழி உள்ளிட்ட 14 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட மொத்தம் 262 பெண்கள் உள்பட 893 பேர் கைது செய்யப்பட்டனர்.