

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் நவம்பர் முதல் இன்று வரை ரொக்கமாக ரூ.51.23 லட்சம் காணிக்கை வரப் பெற்றுள்ளது.
ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் 52 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்கள் மாதம் ஒருமுறை திறக்கப்பட்டுக் காணிக்கை கணக்கிடப்படும்.
இதன்படி, நவம்பர் மாதம் வசூலான காணிக்கையை நவ.29-ம் தேதி கணக்கிடத் திட்டமிட்டிருந்த நிலையில், அலுவலக விடுமுறை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இன்று 52 உண்டியல்களும் திறக்கப்பட்டுக் காணிக்கை கணக்கிடப்பட்டது. இதில், ரொக்கமாக ரூ.51 லட்சத்து 23 ஆயிரத்து 104 வரப் பெற்றிருந்தது. மேலும், 211 கிராம் தங்கம், 640 கிராம் வெள்ளி மற்றும் ஏராளமான வெளிநாட்டு கரன்சிகளும் வரப் பெற்றிருந்தன.
கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் முன்னிலையில், கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் காணிக்கையைக் கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.