

நெல் வயல்களிலிருந்து மழை நீர் வடிய ஏதுவாக, புதுச்சேரி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் வடிகால் வாய்க்காலில் இறங்கி ஆகாயத் தாமரை செடிகளை அகற்றினார்.
புரெவி புயல் காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2-ம் தேதி இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் வயல்களில் நீர் தேங்கிக் காணப்படுகிறது.
இந்நிலையில், அம்பகரத்தூர் பகுதியில் நெல் வயல்களில் அதிக நீர் தேங்கி இருப்பதாக, புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனிடம் விவசாயிகள் முறையிட்டனர். இதையடுத்து, அவர், இன்று (டிச.8) காலை அப்பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களைப் பார்வையிட்டார்.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலில் விரைவாக நீர் வெளியேற முடியாமல் மண்டியிருந்த ஆகாயத் தாமரை உள்ளிட்ட பல்வேறு செடிகளை, வாய்க்காலில் இறங்கி அங்கிருந்த கிராமவாசிகளுடன் இணைந்து அகற்றினார்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா மற்றும் அதிகாரிகளை அந்த இடத்துக்கு வருமாறு அழைத்து, உடனடியாக அவற்றைச் சரி செய்யுமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து, கண்ணாப்பூர், சேத்தூர், பண்டாரவடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நெல் வயல்களை அமைச்சர் கமலக்கண்ணன் பார்வையிட்டார்.