

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று (டிச.8) வெளியிட்டுள்ள அறிவிப்பு:
"வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம் (செ.மீ.)
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் 7, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், கடலூர் தலா 6, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர், நெய்வேலி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் தலா 5, கொள்ளிடம், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, கடலூர் மாவட்டம் சிதம்பரம், மதுரை மாவட்டம் திருமங்கலம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், திருவாரூர் மாவட்டம் குடவாசல், புதுச்சேரி, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம், தேனி மாவட்டம் உத்தமபாளையம் தலா 4.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை".
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.