

ராமநாதபுரத்தில் அதிமுக - திமுகவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியதாக தி.மு.க .எம்பி., ஆ.ராசா உருவ பொம்மையை அதிமுக.,வினர் ராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் எரித்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
உருவபொம்மை எரித்ததைத் தொடர்ந்து அப்போது அதே பகுதியில் அணிவகுத்து நின்ற திமுகவினர் திடீரென எதிர் கோஷமிட்டு வன்முறையில் ஈடுபட்டனர்.
இதில் கல், செருப்பு, காய்கறியை எறிந்தனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி எஸ்.பி., (பயிற்சி) அரவிந்த், டிஎஸ்பி வெள்ளைத்துரை தலைமையில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதைத் தொடர்ந்து அரண்மனைப் பகுதியில் அதிரடிப்படை போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் எஸ்.பி. கார்த்திக் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.