

புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக கொட்டித் தீர்க்கும் கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சம் விளைநிலங்கள் நீரில் மூழ்கியும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தும் உள்ளது. இதனால் பாதிப்புக்குள்ளான சுமார் 1 லட்சம் பேர் அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்குச் சத்துணவு அமைப்பாளர்களைக் கொண்டு உணவு வழங்கப்படுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் மழைநீர் தேங்கியது. அவற்றை மின்மோட்டார் வைத்து வெளியேற்றிய நிகழ்வும் மாவட்டத்தில் எந்த அளவுக்கு மழை பெய்துள்ளது என்பதை உணர்த்தியிருக்கும் அதேவேளையில், வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியிருப்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறது.
வடகிழக்குப் பருவமழையின்போது கடலூர் மாவட்டம் இயற்கைச் சீற்றத்துக்கு உள்ளாவது வாடிக்கையான ஒன்று. அதிலும் கடந்த 1996ஆம் ஆண்டு முதலே பல்வேறு இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டும் இம்மாவட்டத்தில் அதனை எதிர்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே தொடர்ந்து வரும் பாதிப்பின் மூலம் தெரியவருகிறது.
கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளை உணர்ந்த மாவட்ட மக்கள் இந்த ஆண்டு, தங்களையும் உடமைகளையும் காப்பாற்றிக் கொள்ள தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொண்டு, நிவர் புயல் அறிவிப்பு என்றதும்,சேதமடைந்த மின்கம்பம் குறித்த தகவல், தாழ்வாக மின்கம்பிகள் குறித்த தகவல்களை மின்சார வாரியத்திற்குத் தெரிவித்ததும், மரங்களை வெட்டியதும், தாங்களாகவே அரசின் நிவாரண முகாம்களுக்குச் சென்றதும் சற்று ஆறுதல் தரக்கூடிய விஷயங்கள்.
அதேநேரத்தில், நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, வடிகால் வாய்க்கால்களையும் சீரமைத்துள்ளதால் கனமழை பெய்தாலும் பெரிய அளவுக்கு பாதிப்பிருக்காது என எண்ணியிருந்த நிலையில், புரெவி புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட கனமழை, குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட விதத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.
இதுதவிர வடகிழக்குப் பருவமழையால் கனமழை பெய்தால் வெள்ள சேதம் ஏற்படுக்கூடும் என எண்ணி மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளுடன், ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 2,500 மணல் மூட்டைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தியது. அவ்வாறு செய்திருக்கிறார்களா என்பதை மாவட்ட ஆட்சியரும் கடந்த செப்டம்பர் மாதமே ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும் சென்று பார்வையிட்டார்.
நிவர் புயல் கரையைக் கடந்த நிலையிலும், கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, கீரப்பாளையம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 5,000 மூட்டைகள் வரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், அவ்வாறு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருசில ஊராட்சி ஒன்றியங்களில் வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை ஊராட்சி ஒன்றியத் தலைவரின் பரிந்துரையின் பேரில் ரூ.200க்கு விற்கப்பட்டதாகவும், மணல் மூட்டைக்கு பதில் மண் மூட்டைகளை தயாரித்துப் பெயரளவுக்கு சில வாய்க்கால்களில் அடுக்கிவைக்கப்பட்டதாகவும், அவை கனமழையில் கரைந்துபோனதாகவும் பெருமாள் ஏரி கரையோர மக்கள் தெரிவிக்கின்றனர்.
திட்டக்குடியை அடுத்த கோடங்குடியில் ரூ.5 லட்சம் செலவில் தூர்வாரப்பட்ட ஏரியில் கரை உடைப்பு ஏற்பட்டபோது, அதை அந்த கிராம விவசாயிகளே சரிசெய்தனர்.
தூர்வார ஒப்பந்தம் விட்ட மங்களூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் அப்பகுதியைப் பார்வையிடவுமில்லை, தயார் நிலையில் வைத்திருந்ததாகக் கூறும் மணல் மூட்டைகளைக் கொண்டு ஏரிக் கரை உடைப்பைச் சரி செய்யவும் இல்லை என்கிறார், பசுமை கிராமம் அமைப்பின் தலைவர் அறிவழகன்.
குறிப்பாக, கடலூர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஆகிய ஒன்றியங்களில் வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் சரிவரப் பயன்படுத்தப்பட்டிருந்தால், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே, ஆட்சியர் முன்னேற்பாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அறிக்கை கேட்டு நடவடிக்கை மேற்கொள்வதோடு, பேரிடரை எதிர்கொள்ளும் மாவட்டம் என்பதைப் பெயரளவுக்கு இல்லாமல், பேரிடர் ஏற்பட்ட மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்கிறார், கடலூர் அனைத்துக் குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் மருதவாணன்.
மணல் மூட்டைகள் பயன்பாடு குறித்து கடலூர் பொதுப்பணித்துறைச் செயற்பொறியாளர் சுதர்சனிடம் கேட்டபோது, கடலூர் சிதம்பரம் பகுதியில் மட்டும் சுமார் 20 ஆயிரம் மணல் மூட்டைகள் பயன்படுத்தியிருப்பதாகவும், விருத்தாசலம் பகுதியில் சுமார் 2,000 மணல் மூட்டைகள் வரை பயன்படுத்தியிருப்பதாகவும், ஊரக வளர்ச்சித் துறையிடமிருந்து மணல் மூட்டைகள் பெறப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறையில் விசாரித்தபோது மத்தியக் குழுவினர் வந்திருப்பதால் தற்போது அதுகுறித்துப் பேச இயலாது எனத் தெரிவித்துவிட்டனர்.