

கரோனா தொற்று காரணமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான் திட்டம்’ ஓர் ஆண்டு தாமதமாகும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. அந்தவரிசையில் உலகிலேயே விண்ணுக்கு அனுப்பும் 4-வது நாடாக இந்தியா விரைவில் இடம்பெற உள்ளது. அதற்காக ‘ககன்யான்’ என்ற பெயரில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மிகப் பெரிய திட்டப் பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்தப்படும் ‘ககன்யான்’ திட்ட விண்கலத்தில் 3 வீரர்கள் விண்வெளி செல்ல உள்ளனர்.
‘ககன்யான்’ விண்கலம் விண்வெளியில் பூமியை தாழ்வான நிலையில் இருந்து 7 நாட்கள் சுற்றிவரும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்துக்கு தேவையான கருவிகள், உதிரி பாகங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்து வழங்கி வருகிறது.
2021 டிசம்பரில்...
முன்னதாக, இத்திட்டத்தில், முதல் ஆளில்லா விண்கலம் 2020-ம் ஆண்டு டிசம்பரிலும், இரண்டாவது ஆளில்லா விண்கலம் 2021-ம் ஆண்டு ஜூலையிலும் விண்ணில் ஏவப்பட திட்டமிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு டிசம்பரில் விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கரோனா பாதிப்புகாரணமாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டப் பணிகள்தாமதமாகும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
மனிதர்களை விண்வெளிக்கும் அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஆனாலும், கரோனா பாதிப்பு காரணமாக ‘ககன்யான்’ திட்டப் பணிகள் ஓர் ஆண்டு காலம் தாமதமாகும். எனவே, ‘ககன்யான்’திட்டத்துக்கு தேவையான முதற்கட்ட 2 பணிகளுக்கு அடுத்த ஆண்டுஇறுதி அல்லது அடுத்தடுத்த ஆண்டை இலக்காகக் கொண்டுள்ளோம். அதேபோல், இந்தத் திட்டத்துக்கு தேவையான உயர் உந்துதல் ஏவுகணையான (ஹெவி லிப்ட் லாஞ்சர்) ஜிஎஸ்எல்வி எம்கே3 அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இந்த ஏவுகணையில் மனித மதிப்பீட்டுக்கான செயல்முறைகள் நடைபெற்று வருகின்றன. ஜிஎஸ்எல்வி எம்கே3-யில் உள்ள ஸ்ட்ராப்-ஆன் பூஸ்டர்கள் (எஸ் 200) உயர் உந்துதல் சக்திக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் உள்ள வன்பொருளில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப தேவையான பல புதிய வடிவமைப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஜிஎஸ்எல்வி எம்கே3 ஏவுகணையில் 3.2 மீட்டர் விட்டம், 8.5 மீட்டர் நீளம் மற்றும் 5.5 டன் எடையுள்ள மோட்டார் பகுதிமுதல் முக்கியமான பூஸ்டர் பிரிவுவரை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.