Published : 08 Dec 2020 03:14 AM
Last Updated : 08 Dec 2020 03:14 AM

பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர் இடைநீக்கம்: காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நடவடிக்கை

வடபழனியில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் மது போதையில் அத்துமீறி நடந்து கொண்ட போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னை முகப்பேரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் வடபழனி தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 6-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணி அளவில் பணி முடிந்து, வடபழனி 100 அடி சாலையில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவர், அந்த பெண்ணை அணுகி, தன்னுடன் வாகனத்தில் வருமாறு கூப்பிட்டுள்ளார். காவலர் சீருடை அணிந்திருந்ததால் அந்த பெண்ணும் மரியாதையாக வேண்டாம் என்று மறுத்துள்ளார். உடனே அந்த காவலர் வாகனத்தில்இருந்து கீழே இறங்கி அந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிடவே, அருகே இருந்தவர்கள் விரைந்து வந்துள்ளனர். அவர்களிடமும் போலீஸ்காரர் திமிராக பேசியிருக்கிறார். அதன்பின்னரே போலீஸ்காரர் மது போதையில் இருக்கிறார் என்ற விவரம் தெரியவந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த போலீஸ்காரரை சுற்றி வளைத்து தர்மஅடி கொடுத்தனர். அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றவரை பொதுமக்கள் துரத்திச் சென்று தாக்கினர். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தவடபழனி போலீஸார், பாதிக்கப்பட்ட பெண்ணையும் காவலரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். போலீஸ்காரர் அத்துமீறி நடந்து கொண்டது குறித்துபெண் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது.

விசாரணையில், மது போதையில் அத்துமீறியவர் எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருப்பதும்அவரது பெயர் ராஜ் என்பதும் தெரியவந்தது. பொதுமக்கள் தாக்கியதில் காவலர் ராஜின் தலையில் காயம் ஏற்பட்டிருந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். பொதுமக்கள் தாக்கியதாக ராஜுவும் வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தலைமை காவலர் ராஜ்ஜை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x