

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2021-ல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை சமூக வலைத்தளங்களில் துவக்கிவிட்டன. குறிப்பாக வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் குழுக்கள் மூலம் தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் கருத்துகளை முன்வைக்க துவங்கியுள்ளனர்.
அரசியல் மற்றும் சமூக வலைத்தள குழுக்களில் புதுச்சேரி போலீஸாரும் இடம்பெற்று கருத்து தெரிவிப்பது வழக்கமாக இருந்தது. சில சமயம் இக்கருத்துகள் சர்ச்சைக்குரியதாக மாறி பல புகார்களும் எழத் தொடங்கின. இந்நிலையில் அரசியல், அமைப்புகள்சார்ந்த குழுக்களில் இருந்து வெளியேற போலீஸாருக்கு டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா புதிய உத்தரவை பிறப்பித்தார்.
அதில், “யாருக்கும் சாதகமாக இல்லாமல் நடுநிலையாக கடமையாற்ற இக்குழுக்களில் இடம் பெறக்கூடாது. மீறுவோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது.இதையடுத்து நேற்று காலை முதல் ஏராளமான வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து போலீஸார் வெளியேறத் தொடங்கினர். அதேபோல் பல சமூக இணையத்தள குழுக்களில் இருந்து வெளியேறி வருகின்றனர்.