20 சதவீதம் ஈரப்பதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

20 சதவீதம் ஈரப்பதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் என நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

நெல் கொள்முதல் நிலையங் களில் வழக்கமாக 17 சதவீதம் வரையிலான ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தொடர் மழை, பனிக் காலங்களில் நெல்லின் ஈரப்பதம் அதிகரிப்பதால், ஈரப்பதம் 20 சதவீதத்துக்கும் மேல் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நிகழாண்டில் குறுவை அறுவடை நிறைவடையும் தருவாயில் பெய்த தொடர் மழை காரணமாக அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதம் 20 சதவீதத்துக்கும் மேல் சென்று விட்டது. இதனால், கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க முடியாமல் பெரும்பாலான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதை உணர்ந்த தமிழக அரசு விடுத்த வேண்டுகோளின்படி, மத்திய குழுவினர் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த மாதம் ஆய்வு செய்தனர்.

அந்த ஆய்வின் அடிப்படையில், ஈரப்பதத்தில் சில தளர்வுகளுடன் நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அனுமதி கடிதத்துடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சந்தைப் பிரிவு அலுவலகத்தில் இருந்து வரப் பெற்றுள்ள சுற்றறிக்கையை திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளுக்கு திருவாரூர் நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அனுப்பி வைத்துள்ளார்.

அதில், சாதாரண ரகம் 17 சதவீதம் ஈரப்பதத்துடன் குவிண் டால் ஒன்றுக்கு ரூ.1,868-க்கு கொள்முதல் செய்யப்படும். 17 முதல் 18 சதவீத ஈரப்பதத்துடன் கொண்டுவரப்படும் நெல் ரூ.1,849.32-க்கும், 18 சதவீதம் முதல் 19 சதவீதம் வரை உள்ள நெல் ரூ.1,830.64-க்கும், 19 சத வீதம் முதல் 20 சதவீதம் வரை ரூ.1,811.96-க்கும் கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

சன்ன ரகம் 17 சதவீத ஈரப்பதத்துடன் ரூ.1,888-க்கு கொள்முதல் செய்யப்படும். இந்த ரக நெல்லையும் 20 சதவீதம் ஈரப்பதம் வரை ஈரப்பத தளர்வு அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை கழித்து கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in