நில மோசடிப் புகாரில் ரமேஷ் குடவாலாவுக்கு எதிராக ஆடியோ ஆதாரம் உள்ளது: உயர் நீதிமன்றத்தில் நடிகர் சூரி தரப்பு தகவல்

நில மோசடிப் புகாரில் ரமேஷ் குடவாலாவுக்கு எதிராக ஆடியோ ஆதாரம் உள்ளது: உயர் நீதிமன்றத்தில் நடிகர் சூரி தரப்பு தகவல்
Updated on
1 min read

நில மோசடிப் புகாரில் ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா ஈடுபட்டதற்கான ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக நடிகர் சூரி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவற்றைக் காவல்துறையிடம் வழங்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நில மோசடி தொடர்பாக, முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோருக்கு எதிராக அடையாறு காவல் நிலையத்தில் நடிகர் சூரி புகார் அளித்தார். அதன் பின்னர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

நீதிமன்ற உத்தரவுக்குப் பின் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ரமேஷ் குடவாலா, அன்புவேல்ராஜன் மீது வழக்குப் பதிவு செய்தனர். அந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி நடிகர் சூரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.ரவீந்திரன் முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரபாவதி ஆஜராகி, காவல்துறை முறையாக விசாரித்து வருவதாகக் கூறி, விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

அதில், 3 கோடி ரூபாய் அளவிற்கான மோசடி நடந்ததில் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனுக்கு மட்டுமே தொடர்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், சூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்பேன்ட் தினேஷ், பண மோசடியில் ரமேஷ் குடவாலாவின் தலையீடு குறித்துத் தங்களிடம் ஆடியோ மற்றும் மின்னணு ஆதாரங்கள் உள்ளதகாவும், அதைக் காவல்துறையிடம் ஒப்படைத்தால் அழிக்க வாய்ப்புள்ளதால் சிபிஐ விசாரணைக்கு மாற்றும்போது, சிபிஐ வசம் தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகவும் வாதிட்டார்.

இவற்றைப் பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்குத் தொடர்பாக நடிகர் சூரியிடம் உள்ள ஆவண ஆதாரங்களைக் காவல்துறையிடம் ஒப்படைத்து விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிட்டு, வழக்கை 4 வாரங்களுக்குத் தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in