Published : 07 Dec 2020 06:57 PM
Last Updated : 07 Dec 2020 06:57 PM

135-வது ஆண்டாக கம்பீரம் குறையாமல் காணப்படும் ஏ.வி.மேம்பாலம்: மதுரையின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படுமா?

மதுரை

வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் கட்டிய மதுரை ஏ.வி.மேம்பாலம், பல்வேறு வெள்ளப்பெருக்கையும், இயற்கை சீற்றங்களையும் கடந்து 135-வது ஆண்டாக கம்பீரமாக காணப்படுகிறது.

இதனால், இந்த பாலத்தை மதுரையின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரை வழியாக ஓடும் வைகை ஆற்றில் கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன் ஆண்டு முழுவதுமே வெள்ளப்பெருக்கு காணப்படும். இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஆற்றங்கரைகளில் மதுரை திருவிழாக்கள் களைகட்டும். இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படாத காலத்தில் மதுரையின் வட பகுதியில் இருந்து தென்பகுதிக்குச் செல்ல முடியாமல் இரு பகுதி மக்களும் தனித்தீவில் இருப்பது போல் தவித்தனர்.

மக்களின் இந்த நீண்ட நாள் போராட்டத்திற்கு விடிவு ஏற்படும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் ஏ.வி.மேம்பாலத்தை கட்டியனர். இந்த பாலம், கட்டி நாளை டிசம்பர் 8-ம் தேதியுடன் 134 ஆண்டுகளை நிறைவு பெற்று 135 ஆண்டை தொடங்குகிறது.

நூற்றாண்டு கடந்த ஏராளமான வெள்ளப்பெருக்கையும், இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி தற்போது வரை கம்பீரம் குறையாமல் காணப்படும் இந்த ஏ.வி.மேம்பாலத்தை மதுரையின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று மதுரை வைகை நதி மக்கள் இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

அவர்கள் நாளை காலை ஏ.வி.மேம்பாலத்தின் 135-வது கொண்டாட்டம் மற்றும் அதனை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் விழா எடுக்கின்றனர்.

இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறியதாவது:

1886-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி அப்போதைய பிரிட்டிஷ் அரசின் வைஸ்ராயராக இருந்த ஏர்ல் ஆஃப் டஃப்ரன் இந்த பாலத்தின் கட்டுமானபணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார்.

இந்தப் பாலம் சுமார் 2 1/2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை திறந்து வைக்க அப்போதைய பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட் விக்டர் மதுரைக்கு நேரடியாக வருவதாக இருந்தது. மதுரையில் அந்த நேரத்தில் தற்போதைய கரோனா போல் பிளேக் நோய் பரவிக் கொண்டிருந்தது.

அதனால், இளவரசர் அந்த பயணத்தைத் தவிர்த்தார். ஆனாலும், அவரது நினைவாக அந்த பாலத்திற்கு ஆல்பர்ட் விக்டர் என்ற பெயரே வைக்கப்பட்டது.

இந்தப் பாலம், கட்டுவதற்கு அப்போது ரூ.2.85 லட்சம் மட்டுமே செலவாகியுள்ளது. தற்போது தினமும் 3 லட்சம் வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றன. அத்தனை வாகனங்களின் எடையையும், அதன் வேகத்திற்கும் ஈடுகொடுத்து இந்த பழம்பெரும் பாலம் வலுவாக இருக்கும். இந்த ஏ.வி. மேம்பாலம் பிரிட்டிஷாரின் கட்டுமானத் திறமைக்கு இன்று வரை சான்றாக உள்ளது.

மதுரையில் அதற்கு பிறகு கட்டிய பாலம் இடிக்கப்பட்டு சமீபத்தில் புதிய பாலம் கட்டிய வரலாறும் நடந்துள்ளது. ஆனால், இந்த பாலம் மட்டும் தற்போது வரை உயிர்ப்புடன் இயங்கி கொண்டிருக்கிறது.

மதுரை மக்களின் நெஞ்சங்களில் குடிக் கொண்டுள்ளது. இத்தனை சிறப்புமிக்க இந்த ஏ.வி.மேம்பாலம்பிறந்த நாள் கொண்டாடுவது அவசியமானது.

தற்போது பாலத்தின் அடிப்பகுதிகள், கைப்பிடி சுவர்கள் பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்து கொண்டிருக்கிறது. பாலத்தின் அடிப்பகுதி கான்கிரீட் உதிர்கிறது.

பாலத்தின் அடிப்பகுதியில் தண்ணீர் செல்லும் 2,7,8 வட்ட வடிவத் தூண்களின் அடித்தளமும் சேதமடைந்துள்ளது. பாலத்தின் அடியில் உள்ள கருங்கல்கள் தண்ணீர் செல்வதால் பெயர்ந்து கொண்டிருக்கிறது.

பாலத்தின் அஸ்திவாரத்தை நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். நூறு ஆண்டுகளை கடந்த கட்டிடங்களை பாரம்பரிய சின்னம் என்று அறிவிப்பதை போல் ஏ.வி. மேம்பாலத்தை மதுரையின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x