

தமிழகத்தில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததாக அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.
பாஜகவின் வேல்யாத்திரை கடந்த நவம்பர் 6-ம் தேதி திருத்தணியில் தொடங்கியது. பல்வேறு மாவட்டங்கள் வழியாக நடத்தப்பட்ட இந்த யாத்திரை திருச்செந்தூரில் நிறைவு பெற்றது.
இதற்கான நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பாஜக மாநில தலைவர் முருகன், துணை தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுசெயலாளரும், தமிழக பொறுப்பாளருமான ரவி, பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு நேற்று புறப்பட்டுச் சென்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் முருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, பாஜக நடத்திய வேல் யாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது என்று தெரிவித்தார். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளது குறித்தும், ரஜினியின் அரசியல் கட்சி பின்னணியில் பாஜக உள்ளதா என்ற கேள்விகளுக்கு, ரஜினி அரசியல் கட்சி தொடங்கட்டும் பார்க்கலாம் என்று மழுப்பலாக பதில் தெரிவித்தார்.
பாஜக மாவட்ட தலைவர் மகாராஜன், செயலாளர் முத்துசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.