வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு: விவசாயிகளிடம் நிவர் புயல் பாதிப்புகள் குறித்துக் கேட்டறிந்தனர்  

நிவர் புயலால் கண்டிப்பேடு பகுதியில் சேதமடைந்த பப்பாளித் தோட்டத்தைப் பார்வையிட்ட மத்தியக் குழுவினர். 
நிவர் புயலால் கண்டிப்பேடு பகுதியில் சேதமடைந்த பப்பாளித் தோட்டத்தைப் பார்வையிட்ட மத்தியக் குழுவினர். 
Updated on
2 min read

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய அரசின் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். நிவர் புயலால் வேலூர் மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்து 475 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களுடன் பப்பாளி, கொய்யா, பயிறு வகைகள் எனத் தோட்டக்கலைப் பயிர்களும் சேதமடைந்தது தெரியவந்தது. இதனால் 3 ஆயிரத்து 66 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்து 732 ஏக்கர் வேளாண் பயிர்களுடன் தோட்டக்கலைப் பயிர்களும் சேதமடைந்துள்ளன. இங்கு 5 ஆயிரத்து 327 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மாவட்டங்களிலும் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியக் குழுவினர் இன்று (டிச.7) ஆய்வு செய்தனர்.

தமிழக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளரும் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான மணிவாசன் தலைமையில் மத்திய நீர்வள ஆணைய இயக்குநர் ஹர்ஷா, மத்திய மின்சக்தித் துறை துணை இயக்குநர் சுமன், மத்திய செலவினங்கள் துறை துணை இயக்குநர் அமித்குமார், மத்திய ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் தரம் வீர் ஜா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று (டிச.7) ஆய்வு மேற்கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவினரிடம் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் விளக்கினார்.
வேலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவினரிடம் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் விளக்கினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த மத்தியக் குழுவினரை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று காலை சந்தித்து, புயல் சேத விவரங்களைக் காணொலிக் காட்சிகள் மூலம் விளக்கினார். அப்போது, தமிழக தோட்டக்கலைத் துறை கூடுதல் இயக்குநர் கண்ணன், வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, காட்பாடி கண்டிப்பேடு பகுதியில் புயலால் சேதமடைந்த பப்பாளித் தோட்டம், இளையநல்லூர் ஊராட்சியில் நெல் வயல்கள், பொன்னை அணைக்கட்டில் சேதமடைந்த மதகுகள், மாதாண்டகுப்பம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட சாலைகளையும் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது திமுக பொதுச் செயலாளரும் காட்பாடி சட்டப்பேரவை உறுப்பினருமான துரைமுருகன் உடனிருந்தார்.

பொன்னை அணைக்கட்டில் சேதமடைந்த மதகுகளைப் பார்வையிட்ட மத்தியக் குழுவினர்.
பொன்னை அணைக்கட்டில் சேதமடைந்த மதகுகளைப் பார்வையிட்ட மத்தியக் குழுவினர்.

ராணிப்பேட்டையில் ஆய்வு

வேலூர் மாவட்டத்தில் ஆய்வுகளை முடித்துக்கொண்ட மத்தியக் குழுவினர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆய்வுக்காகச் சென்றனர். ராணிப்பேட்டை பெல் விருந்தினர் மாளிகையில் மதிய உணவுக்காகத் தங்கிய மத்தியக் குழுவினரிடம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் புயல் சேத பாதிப்புகள் குறித்து விளக்கினார்.

பின்னர், வாலாஜா வட்டம் ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் பொன்னையாற்றுப் பகுதியையும் நந்தியாலம் கிராமத்தில் ஏற்பட்ட வாழை மரங்கள் சேதத்தையும், ஆற்காடு சாத்தூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள், கே.வேளூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் ஆகியவற்றை மத்தியக் குழுவினர் தொடர்ச்சியாக ஆய்வு செய்துவிட்டு, சென்னை புறப்பட்டனர்.

புயலால் சேதமடைந்த வேளாண், தோட்டக்கலைப் பயிர்களைப் பார்வையிட்டதுடன், விவசாயிகளிடம் சேத விவரங்களையும் மத்தியக் குழுவினர் கேட்டறிந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in