

மதுரை மாநகராட்சியில் கடந்த ஆண்டு இதே நவம்பர் வரை சொத்து வரி 42 சதவீதம் மட்டுமே வசூலான நிலையில் இந்த ஆண்டு நெருக்கடியான கரோனா காலத்தில் கூட 56 சதவீதம் வரி வசூலாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் இணைப்பு வரி, பாதாள சாக்கடை இணைப்பு வரி, தொழில் வரி, மாத கடை வாடகை மற்றும் குத்தகை வரி உள்ளிட்ட பல்வேறு வருவாய் இனங்கள் மூலம் ஆண்டிற்கு ரூ.201 கோடி வருவாய் கிடைக்கிறது.
அதிகப்பட்சமாக இதில் சொத்து வரி மட்டும் ரூ.110 கோடி வரை கிடைக்கும். மொத்தம் வீடுகள், வர்த்தகக் கட்டிடங்கள உள்பட 3,24,717 கட்டிடங்களுக்கும், 1,425 அரசு கட்டிடங்களுக்கும் மாநகராட்சி சொத்து வரி நிர்ணயம் செய்துள்ளது.
இந்த ஆண்டு (2020-2021) நவம்பர் மாதம் வரை இதுவரை 56 சதவீதம் வரி வசூலாகியுள்ளது. மீதி 44 சதவீதம் மட்டுமே சொத்து வசூலாக வேண்டிய உள்ளது.
இன்னும் ஏப்ரல் வரை காலக்கெடு உள்ளதால் 90 சதவீதத்திற்கு மேல் சொத்து வரி வசூலாக வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
அதே நேரத்தில் கடந்த ஆண்டு இதே நவம்பர் வரை 42 சதவீதம் மட்டுமே வரிவசூலாகியுள்ளது. இந்த ஆண்டு கரோனா தொற்று நோய் பரவலால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டன.
ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். பலர் ஊதிய குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டனர். அதனால், சொத்துவரி வசூல் கடுமையாக பாதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கவலையடைந்து இருந்தனர்.
ஆனால், இந்த நெருக்கடியான காலக்கட்டத்திலும் மதுரை மக்கள் தங்கள் வீடுகள், வர்த்தகக் கட்டிடங்களுக்கு சொத்து வரி செலுத்த மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு ரூ.50 கோடியே 38 லட்சத்து 85 ஆயிரம் சொத்து வரிநிலுவையில் உள்ளநிலையில், இந்த ஆண்டு சொத்துவரியில் ரூ. 42 கோடியே 98 லட்சத்து 17 ஆயிரம் வசூல் செய்ய வேண்டிய உள்ளது. இதில், கடந்த ஆண்டு நிலுவை சொத்து வரியை வசூலிப்பதுதான் பெரிய போராட்டமாக உள்ளது, ’’ என்றனர்.