

ரஜினியின் அரசியல் வருகையால் பாதிப்பில்லை எனவும், மு.க.ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்றும் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே முழுவீச்சில் தங்களுடைய களப்பணிகளைத் தொடங்கிவிட்டன. அனைவருக்குமே அதிர்ச்சியளிக்கும் விதமாக டிசம்பர் 3-ம் தேதி ரஜினி தனது அரசியல் வருகையை உறுதி செய்தார்.
ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ளதாகவும், டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ரஜினி. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ரஜினியின் அரசியல் வருகையைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ரஜினியின் அரசியல் வருகைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.
ரஜினியின் அரசியல் வருகை குறித்து அதிகம் விமர்சிக்காமல், மேம்போக்காகவே கருத்து தெரிவித்து வருகிறது திமுக. தற்போது 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு கனிமொழி எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
அதில் ரஜினியின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு கனிமொழி கூறியிருப்பதாவது:
"திமுகவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம்தான் நடிகர் ரஜினி கட்சியைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ஆதலால் அதன்பிறகே நான் கருத்துச் சொல்வதுதான் நியாயமாக இருக்கும். ஆனால் அது திமுகவின் வெற்றிக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்று என்னால் சொல்லமுடியும். மு.க.ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்பதை உறுதியாகச் சொல்லலாம்".
இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.